Wednesday, June 14, 2023

 


அறிமுகம்

ஆரம்ப காலங்களில் அபிவிருத்தி என்று பேசப்பட்டு வந்த எண்ணக்கருவானது பிற்காலத்தில் பேண்தகு அபிவிருத்தி என்று மேம்பட்ட பதத்தினால் அழைக்கப்படுகின்றது. இது அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டுவரும் தனித்துவமான எண்ணக்கருவாகும். இதனை வரைவிலக்கணப்படுத்துவது கடினமானதாகும். ஏனெனில் தொடர்ச்சியாக விருத்தியடைந்து செல்லும் ஒரு எண்ணக்கருவாக காணப்படுகின்றது. 

“எதிர்கால சந்ததியினர்க்கு பாதிப்பினை ஏற்படுத்தாத வகையில் மக்களின் இன்றைய தேவையினை பூர்த்தி செய்வது மற்றும் வறுமையினை குறைப்பதற்குமான ஒரு நடவடிக்கை ஆகும்” என பேண்தகு அபிவிருத்தியை “பிரெண்லான்ட் ஆணைக்குழு” முதல்முதலாக 1987ஆம் ஆண்டு வரைவிலக்கணப்படுத்தி உள்ளது. இது பொருளாதாரம், சமூகம் மற்றும் சூழல் என்கின்ற மூன்று தளத்திலே கட்டியெழுப்பப்படுகின்றது. கலாசாரம் மற்றும் தனிமனிதன் என்பனவும் இதன் கூறுகளாக தற்காலத்தில் கருதப்படுகின்றன.

பேண்தகு அபிவிருத்தியானது சுற்றாடல் வரையறைக்குள் வாழ்தல், உறுதியானதும் ஆரோக்கியமானதுமான சமூகத்தை உறுதிப்படுத்தல், பேண்தகு பொருளாதாரத்தை அடைதல், நல்ல ஆளுகையை உறுதிப்படுத்தல் மற்றும் விஞ்ஞான அறிவை பொறுப்புணர்வுடன் பயன்படுத்தல் என்ற ஐந்து வழிகாட்டல் தத்துவங்களினால் இயக்கப்படுகின்றது.

மூலதனம் என்பது பணத்தால் மாத்திரம் மதிப்பிடக்கூடியதொன்றல்ல இது அந்நியோன்ய இடைத்தொடர்பு, சமூக வலையமைப்பு, மதிப்பு, பெறுமானம் போன்றவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்ட எண்ணக்கருவே மூலதனமாகும். குடும்ப உறுப்பினர்களிடையே மாத்திரமின்றி ஏனையோரிடையேயும் முக்கியத்துவம் பெறும் ஒரு ஆழமான எண்ணக்கருவாக இது அமைந்துள்ளது.

பொதுவாக மூலதனம் பொருளாதார மூலதனம். சமூக மூலதனம், கலாசார மூலதனம் என்ற வகைகளில் பாகுபடுத்தப்படுகின்றது. பொருளாதார மூலதனம் என்பது முழுமையான வருமானத்தைக் குறிக்கும். சமூக மூலதனம் என்பது தனியாளிடம் காணப்படும் சமூக தொடர்பு சார்ந்த வலையமைப்பைக் குறிக்கும். கலாசார மூலதனம் என்பது குறியீட்டுப் பெறுமதியாகிய நற்பண்புகள், அறிவு, மதிப்பு போன்றவற்றைக் குறிக்கும்.

மூலதனம் என்பது ஒரு நிறுவனத்தின் மீது, ஒரு பிரதேசத்தின் மீது, ஒரு நாட்டின் மீது செல்வாக்குச் செலுத்தும் விடயமாகும். பொருளாதார, அரசியல், சமூகச் செயற்பாடுகளை யதார்;த்த ரீதியாக புரிந்து கொள்வதற்கு உதவிய ஒரு நூலாக கார்ல் மார்க்சின் “மூலதனம்” என்னும் நூல் காணப்படுகின்றது. பொருளாதார மூலதனத்தை முதன்மைப்படுத்தியே ஏனைய மானிடச் செயற்பாடுகள் தீர்மானிக்கப்படுவதாக மார்க்சிசக் கோட்பாடு கூறுகின்றது.

எனினும் பொருளாதாரக் காரணியினுள் மாத்திரம் ஒரு தனிநபரால் அடையப்பட வேண்டிய அனைத்தும் அடங்கியிருக்கவில்லை என 1992 இல் சமூக மூலதனம் என்னும் எண்ணக்கருவை பிரசித்தப்படுத்திய ரொபேட் புட்டினம் என்னும் அமெரிக்க சமூக விஞ்ஞானி குறிப்பிட்டுள்ளார். இவர் சமூக மூலதனம் தொடர்பிலும் கலாசார மூலதனம் தொடர்பிலும் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார். எனவே பேண்தகு அபிவிருத்தியில் கல்வியினால் கிடைக்கப்பெறும் சமூக, பொருளாதார மற்றும் கலாசார மூலதனம் உதவுமாற்றைப் பற்றி நோக்குவோமாயின்,

பிரச்சினைக் கூற்று - 

கல்வியினால் கிடைக்கப் பெறும் சமூக, பொருளாதார மற்றும் கலாசார மூலதனங்கள் பற்றியும் இவை பேண்தகு அபிவிருத்திக்கு உதவும் விதம் தொடர்பாகவும் ஆராய வேண்டியுள்ளது.

பிரச்சினை பகுப்பாய்வு - நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை உலகில் ஏற்படுத்துவதற்காக முன் வைக்கப்பட்ட குறிக்கோள்களை அடைந்து கொள்வதனை இலகுபடுத்துவதற்காக,

1. தேவைகள்: உலகிலுள்ள வறுமையான மக்களின் தேவைகளை நிறைவு செய்வதனை முன்னுரிமைப்படுத்தல். 

2. வளங்களை மீள் பகிர்தல்: எல்லோரினதும் தரமான வாழ்வை மேம்படுத்துவதற்காக வளங்களை மீள்பகிர்ந்து கொள்ளுதல். அத்தடன் நிகழ்கால சந்ததியினரினதும், மற்றும் எதிர்கால சந்ததியினரினதும் தரமான வாழ்வை மேம்படுத்தும் வகையில், சூழலின் திறனை அடிப்படையாகக் கொண்டு, நீண்டகால அடிப்படையில் வளங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியங்களை உருவாக்கல். 

3. கட்டுப்படுத்தல்: நிகழ்கால சந்ததிகளும் எதிர்காலத் தலைமுறைகளும் சூழலின் ஆற்றல்களைப் பயன ;படுத்துவதற்கான வறையறைகள் மீது அரச தொழிநுட்பங்களையும் சமூக நிறுவனங்களையும் பயன்படுத்தி, அவற்றைக் கட்டுப்படுத்தும் திணிக்கும் கருத்துக்களை கொண்டிருக்கின்ற வகையில் உருவாக்கல்.  

இம் மூன்று (3) விடயங்களையும் உள்ளடக்கி, பதினேழு (17) அம்சங்களை இலக்குகளாகவும், மேலும் உபபகுதி இலக்குகளாகவும் இலக்குகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்விலக்குகள் மிலேனிய அபிவிருத்தி இலக்குகளை விட மிகவும் வலிமையான தொடர்புகளை முன்வைப்பதாக அமைந்துள்ளது. இந்நிலைத்து நிற்கும்  அபிவிருத்தியின் இலக்குகள் மிலேனிய அபிவிருத்தி இலக்குகளின் தொடர்ச்சியாக அமைகின்ற ஒன்று என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நிலைத்து நிற்கும் அபிவிருத்தியின் இலக்குகள்

1. உலகில் எல்லா இடங்களிலுமுள்ள எல்லா வடிவமாக வறுமையையும் முடிவுக்குக் கொண்டு வருதல் 

உலகில் காணப்பட்ட அதிகரித்த வறுமை நிலையானது,1990 களுக்குப் பின்னர் அரைவாசியாகக் குறைக்கப்பட்டுள்ளது இது மிலேனிய அபிவிருத்தியின் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அடைவாகும். இருப்பினும் இன்னும் விருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் நாளொன்றுக்கு 1.25 யைக் கூட வருமானமாகப் பெறாதவர்கள் 5:1 பேராகக் ஆகக் காண்ப்டுகின்ற நிலைமைகளும் உள்ளதனை 2015 ஆம் ஆண்டின் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இன்னும் 836 மில்லியன் மக்கள் அதிதீவிர வறுமையில் உள்ளனர். இதன் வெளிப்பாடாக பசி பட்டினிமற்றும் போசாக்கின்மை காணப்படுகின்றது. அத்துடன், கல்வியையும் ஏனைய அடிப்படையான தேவைகளையும் அடைந்துகொள்ளும் வழிகள் கட்டுப்படுத்தப்பட இவ்விடயங்கள் வழிவகுப்பதாக அமைகின்றது. இதனால் சமூகபாகுபாடும், சமூகவிலகலும் அதிகரிக்கும். அதேபோல தீர்மானம் எடுத்தலில் குறைந்தளவில் பங்கெடுப்பதையும் இந்நிலமை உருவாக்கும். எனவே இங்கு சமத்துவத்தை ஊக்குவிக்கின்ற மற்றும் நிலையான தொழில்கள் என்பனவற்றை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி என்பது தேவையான ஒன்றாக இருக்கின்றது. இதனால்தான் இத்தகைய விடயத்தை ஏற்படுத்துவதற்காக இதன் முதலாவது இலக்காக வறுமையை ஒழிப்பது முன்வைக்கப்பட்டுள்ளது. 

2.பசி மற்றும் பட்டினியை முடிவுறுத்தல், உணவுப் பாதுகாப்பை அடைதல், ஊட்டச்சத்தை மேம்படுத்தல் அத்துடன் நிலையான விவசாயத்தை ஊக்குவித்தல்.

இங்கு எப்படி உணவைப் பகிர்ந்து கொள்வது என்பது கேள்வியாக அமைகின்றது. அதாவது, விவசாயம், காடுகள் மீன்வளம் என்பன சரியான முறையில் இருந்தால் எல்லோருக்கும் இவற்றைப் பகிர்துகொள்ளவும், வருமானத்தை பரம்பரைபரம்பரையாக உற்பத்தி செய்யவும் முடிந்திருக்கும் அல்லது. முடியும். ஆனால், இன்று எமது மண், உயிரினங்கள், இயற்கை கனியவளங்கள், தாவரங்கள், காடுகள், சமுத்திரங்கள் என்பன வேகமாகக் குறைந்துள்ளன. எனவே மீதமுள்ள இவற்றில் தங்கியிருக்க வேண்டியுள்ளது. மறுபுறம் இவற்றின் அழிவால் காலநிலை மாற்றங்களும் இயற்கை அனர்த்தங்களும் அதிகரித்து, விவசாயம் மற்றும், உணவு வளங்களைப் பாதித்துள்ளது. இதனால் வறட்சி பசி, பஞ்சம் என்பன அதிகரித்து வருகின்றன. இன்று 750 மில்லியனாக இருக்கின்ற பசியால் வாடும் மக்களின் தொகை 2050 ல் 2 பில்லியனாக மாறும் என எதிர்வு கூறப்படுகின்றது. இருப்பினும் தற்போது உணவு உற்பத்தியும் அதிகரித்துக் காணப்படுகின்றது. எனவே இவற்றை நாடுகளிடையே பகிர்ந்து கொள்ளவும், அதன் மூலம் மக்கள் உணவுப்பாதுகாப்பை அடையவும், அதனூடாக போசாக்கை மேம்படுத்தவும் அத்துடன் நிலையான விவசாயத்தை ஊக்குவிக்கவும் இக்குறிக்கோள் முனைகின்றது.  

3.ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்தலும் அத்துடன் எல்லா வயதினரின் நலவாழ்வை மேம்படுத்தலும்.

அனைத்து வயதுப் பிரிவினரின் நலவாழ்வை மேம்படுத்தலும் மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை உறுதிசெய்தலும் நிலைத்துநிற்கும் அபிவிருத்திக்கு அடிப்படையாக அமைகின்றது என இக்குறிக்கோள் கருதுகின்றது. கடந்த இரண்டு தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நிலைத்து நிற்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளால், உலக சுகாதாரத் தரம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்ப்பகால நோய்களும், குழந்தைகளைப் பாதிக்கும் நோய்களும், மலேரியா, பொலியோ, எச்.ஜ.வி தொற்றுக்கள் என்பன வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயுள்காலம் அதிகரித்துள்ளது. இருப்பினும் மறுபுறம் இத்தகைய நோய்யியல் நிலைமைகள் முழுமையாக குறைவடையவில்லை. எனவே நோய்த் தொற்றுக்கள் முன்னைய காலங்களை விட தீவிரமாகியும் வருகின்றன. 2018 ம் ஆண்டு குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் நோய் திடீரெனத் தாக்கியது. 2019 ல் ஜரோப்பாவில் மீண்டும் மலேரியா தாக்கம், ஆபிரிக்காவில் எபொலா வைரஸ் தாக்கம், 2020 ல் கொவிட் நைன்டீன் வைரஸ் தாக்கம் என்பன் ஏற்பட்டுள்ளது. மேலும், நீண்ட காலமாக இருந்து வருகின்ற நோய்களுக்கு உள்ளாகுவோரின் தொகைகளும் கட்டுப்படுத்த முடியாதவகையில் அதிகரித்துவருகின்றது. எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியத்தை உறுதி செய்து, அவர்களின் நலவாழ்வைத் தொடர்ந்தும் அதிகரிக்க வேண்டியுள்ளது. எனவே நிலைத்து நிற்கும் பணிகளைத் தொடரவேண்டிய தேவைப்பாட்டை இது வேண்டி நிற்கின்றது. 

4. சமத்துவமானதும், தரமானதுமான அனைத்து வகையான கல்வியையும் உறுதிசெய்தல் மற்றும் வாழ்நாள் முழுவதும் கல்வி கற்பதற்கான சந்தர்ப்பங்களை ஊக்குவித்தல்.

தரமான கல்வியைப் பெறுவது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்கும் அவசியமானதாகவுள்ளது. 1990 களிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பாரிய நிலைத்த நிற்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், பாடசாலைக் கல்வியின் எல்லா வகையான மட்டங்களிலும் மாணவர்கள் உள்வாங்கப்படுவதனை மேலுயர்த்தியுள்ளது குறிப்பாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் 91% மாக ஆரம்பக் கல்வி பெறுவதனை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இன்னும் 57 மில்லியன் பிள்ளைகள் பாடசாலைக் கல்வியை அடையாமல் இருக்கின்றனர். 

5.அனைத்துப் பெண்களும், பெண் பிள்ளைகளும் வலுவூட்டப்படல் மற்றும் அவர்கள் பால்நிலை சமத்துவத்தை அடைய வழியமைத்தல். 

பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் சமத்துவமான கல்வியையும் சுகாதார சேவைகளையும் வழங்கல், பொருளாதார மற்றும் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தல், அரசியல் செயன்முறைகள் ,தீர்மானம் எடுத்தல் ஆகியனவற்றில் பிரதிநிதித்துவம் செய்தல் போன்றவை நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்கும் சமூகத்திற்கும் மானுடத்திற்கும் பலமானதாக அமைகின்றது என இவ்விலக்கு குறிப்பிடுகின்றது. உலகில் பல பகுதிகளில் பெண்களும், பெண்பிள்ளைகளும் தொடர்ச்சியாக பாகுபாடுட்டுக்குள்ளாகுதலும், வன்முறைக்குள்ளாக்கப்படுவதும் காணப்படுகின்றது. மிலேனிய இலக்குகளின் செயற்பாடுகளால் இத்தகைய நிலமைகளில் பாரியளவில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் உலகில் இத்தகைய நிலைமைகளில் ஆண்களைப் போல பெண்கள் அரசியல், பொருளாதார கல்வி, சுகாதாரம் ஆகிய செயற்பாடுகளில் சமநிலையான அடைவுகளை பூரணமாக அடைந்து கொள்ளவில்லை என்பதனை ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. எனவே இவ்விலக்கு ஆண்களைப் போல பெண்களும் அரசியல், பொருளாதார கல்வி, சுகாதாரம் ஆகிய செயற்பாடுகளில் சமநிலையான அடைவுகளை அடைந்து கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. 

6. சுகாதாரம், நீர் ஆகியவற்றை அனைவரும் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும், அவற்றை முகாமை செய்யக் கூடியதுமான வசதிகளை உறுதி செய்தல்.

உலகில் வாழ்வதற்கு சுத்தமான நீரைப் பெற்றுக் கொள்ளவது அவசியமானதாகும். ஆயினும் மோசமான பொருளாதார நிலை, வறுமை, சுகாதாரமற்ற நீர் போன்ற காரணத்தால், வருடாந்தம் மில்லின் கணக்கான மக்கள் நோய்த்தொற்று, மரணம் ஆகியவற்றை எதிர்கொண்டு வருகின்றனர். உதாரணமாக: நாளாந்தம் 1000 குழந்தைகள் இத்தகைய சுத்தமான நீர் சுகாதாரமற்ற நிலைகளால் வயிற்றுப்போக்கு நோய்களுக்குள்ளாகின்றனர். இந்நிலமைகள் 76% தால் 1990 க்கும் 2015 களுக்கும் இடையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இயற்கை அனர்த்தத்தால் திடீர் வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் இந்நிலமைகள் அதிகரித்தும் வருகின்றன. எனவே இவற்றிலிருந்து தவிர்ந்து குழந்தைகளை உயிர்காப்பதற்காகச் செயற்பட வேண்டிய தேவைகருதி அவ்விலக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. 

7.மலிவானதும், நம்பகமானதும், நிலைத்து நிற்கக்கூடியதுமான நவீன சக்திகள் எல்லோருக்கும் கிடடைக்கக் கூடிய வகையிலும், முகாமை செய்யக் கூடிய வகையிலும் வழிகளை மேம்மடுத்தல்.

சக்தி வளம் என்பது, மனிதனின் உணவு உற்பத்தி, வருமான அதிகரிப்பு, தொழில் பாதுகாப்பு என அனைத்திற்கும் அடிப்படையாக அமைகின்றது. இருப்பினும் இயற்கை சக்தி வளங்கள் மீதான மனிதனின் ஆதிக்கத்தால் 60மூ மான பச்சைவீட்டு விளைவுகளுக்கு காரணமாயுள்ளது. இதனால் மனித சுழலும், உயிர்ச் சூழலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. எனவே மாற்றுச் சக்திவளம் என்பது பொருளாதார மற்றும் பூமியின் நிலைப்பிற்கு அவசியமானதாகவுள்ளது. எனவே, இவ்வளத்தைப் பாதுகாக்கவும், புதிதான மற்றம் பாதுகாப்பான வளங்களைப் பயன்படுத்தும் வழிமறைகளை நாடுகளில் திணித்து அதனைக் கட்டாயப்படுத்தி மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. இதனால் இவ்விலக்கு அதனை நோக்கிப் பயணிக்கின்றது. 

8. நிலைத்து நிற்கக்கூடிய பொருளாதார வளர்ச்சி; மற்றும் எல்லோருக்கும் திறமையான, ஏற்புடைய தொழில்களை ஊக்குவித்தல்.

உலக சனத் தொகையில் அரைவாசி மக்கள், நாளாந்த வருமானமாக கூ2 னை பெற்றுவருகின்றனர். தொடர்ச்சியாக நிலவி வருகின்ற ஏற்புடைய வேலைப் பற்றாக்குறை, போதுமற்ற முதலீடு என்பன அடிப்படையான சமூக ஒப்பந்தத்தைப் பாதிக்கின்றது. இதனால் தரமான தொழில் வாய்ப்புக்கள் என்பது சாதாரண மக்களக்கு சவாலான ஒரு விடயமாக அமைந்துள்ளது. இத்தகைய நிலைமைகள் மக்களின் எல்லாவகையிலும் சுரண்டலக்ககுள்ளாக்குகின்றது. இச்சந்தர்ப்பத்தில், நிலைத்து நிற்கும் பொருளாதார வளர்ச்சி என்பது தரமான வேலைகளை மக்களுக்கு வழங்குவது அவசியமானது. இல்லையெனில் அது சமூகச் சூழலைப் பாதிப்பதாக அமையும். பூகோளரீதியில், தொழிற்சந்தையில் 2016 தொடக்கம் 2030 ஆண்டிற்குள் மேலும் 470 மில்லியன் புதிய தொழில்கள் குறிப்பிட்ட வயதினருக்கு வழங்க வேண்டிவரும் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. எனவே ஏற்கனவே காணப்படுகின்ற தொழிற் பிரச்சினைகளை அணுகவும், எதிர்கால தொழில் சந்தையில் மக்களின் தொழில்களை நிலைத்துநிற்கும் வகையில் ஏற்படுத்தவும் வேண்டியுள்ளமையால் இவ்விலக்கு இங்கு முக்கியம் பெறுவதாக இருக்கின்றது. 

9. நிலைத்து நிற்கும் தொழில்மயமாக்கம், வளர் கண்டுபிடிப்புக்களை ஊக்குவித்தல் அத்துடன், நெகிழ்ச்சித் தன்மையான கட்டமைப்புக்களை ஊக்குவித்தல்.

தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம், சக்தி, போக்குவரத்து, நீர்ப்பாசனம் ஆகியனவற்றில் முதலீடு செய்வதானது. நிலைத்து நிற்கும் அபிவிருத்தியினை நாடுகளில் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அவை சமூகங்களை வலுவூட்டியுள்ளதுடன், அதன் உற்பத்தி வளர்ச்சி, வருமானம் என்பவைகளையும் அதிகரிக்கச் செய்துள்ளது. இதே போல நிலைத்து நிற்கும் கைத்தொழில் அபிவிருத்ியானது, வருமானத்தின் அடிப்படை வளமாகக் காணப்படுகி;ன்றது. இது எல்லோருக்குமான வாழ்க்கைத்தர அதிகரிப்பினை ஏற்படுத்துகின்றது. அத்துடன் சூழலியல் பிரச்சினைகளுக்கு தொழிநுட்ப ரீதியில் தீர்வுகளை வழங்க முடியுமாக இருப்பதனால், சூழல் பாதிப்பும் குறைவடையும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. எனவேதான் இது தொடர்பான நடவடிக்கைகள் எற்படுத்தப்படவேண்டியது அவசியமாயுள்ளது. இதனைக் கரத்திற்கொண்ட இவ்விலக்கு முன் வக்கப்பட்டுள்ளது. 

10. நாடுகளுக்கிடையிலான சமத்துவமின்மையைக் குறைத்தல்.

அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் வருமான சமமின்மையானது 1990 ற்கும்    2010 ற்கும் இடையில் 11% தினால் மேலும் அதிகரித்துள்ளது. அதேவேளை, இத்தகைய சமமின்மைகளை குறைவடையச் செய்த நாடுகள் பலமான வளர்ச்சியையும் அடைந்துள்ளது. மேலும் இந்நிலமைகள் விருத்தியடைந்த வருகின்ற நாடுகளின் சமூகப் பாதுகாப்பிற்குத் தடையாகவும் அமைந்து வருகின்றது. எனவே இவற்றை நிவர்த்தி செய்வது கட்டாயத் தேவையாகக் இவ்விலக்கு கருதுகின்றது. 

11.பாதுகாப்பனதும், நிலையானதுமான மனிதக் குடியிருப்புக்களை நகர்ப் புறங்களில் ஏற்படுத்தல்.

நகரங்களானது, மக்கள் கருத்துக்கள், வியாபாரம், பண்பாடு, விஞ்ஞானம், சமூக அபிவிருத்தி மற்றும் பல் விடயங்களை உருவாக்குகின்ற ஒரு தளமாகக் காணப்படுகின்றது. சிறந்த நகரங்கள் மக்களின் சமூக, பொருளாதார ரீதியாக சிறந்த அடைவுகளைப் பெற்றுக் கொள்ள வழியமைக்கின்றது. இருப்பினும் இத்தகைய நகரங்களைப் பராமிப்பது மிகுந்த சவாலான விடயமாக உலகில் மாறிவருகின்றது. அதிகரித்த நெருக்கடியால், அதிகரித்த வளநுகர்வு, மாசாக்கம், தொழிலில் போட்டி, குற்றங்கள் என்பவைகளை நகரங்களில் அதிகரிக்கச் செய்துவருகின்றது. இருப்பினும் நகரமயமாக்கம் என்பது தடுத்து நிறுத்த முடியாத ஒரு தோற்றப்பாடாகவும் காணப்படுகின்றது. குறிப்பாக அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் நகராக்கம் அதிகரித்து வருகின்றது. அதேவேளை இதற்குச் சமாந்திரமாக நகரப் பிரச்சினைகளும் உருவாகி வருகின்றது. இதனால் அதன் சமூக, பொருளாதார, பௌதீகச் சூழல்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. 2030 களில் 60மூ மக்கள் நகரங்களில் வாழ்வார்கள் எனஅறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே நகரமயமாதலைத் தடுப்பது சாத்தியமற்ற ஒர் விடயமாக இருப்பினும், அத்தகைய செயற்பாடுகள் சமூக, பொருளாதார, சூழலைப் பாதிக்காத வகையில் உருவாக்குவதில் கவனம் செலுத்தவேண்டிய தேவை காணப்படுகின்றது. இதனை இக்குறிக்கோள் வலியுறுத்துகின்றது,

12. உற்பத்தி வடிவங்கள் மற்றும் நிலையான நுகர்வு ஆகியனவற்றை உறுதிசெய்தல்.

நிலையான உற்பத்தி மற்றும் நுகர்வு என்பது, வளங்களையும், வினைத்திறனான சக்தியையும் ஊக்குவித்தல், அடிப்படை தேவைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதிகளை ஏற்படுத்தல், ஏற்புடைய வேலைகள், எல்லோருக்கும் சிறந்ததரமான வாழ்க்கையை ஏற்படுத்தல் போன்றனவற்றைக் கருதுகின்றது. எனவே இவற்றை அமுல்படுத்தும் போது, அபிவிருத்தித் திட்டங்களின் மூலம், சிறந்த விளைவுகளை அடைந்து கொள்ளவும், எதிர்காலத்தில் பொருளாதார, சூழல், சமூக செலவினைக் குறைக்கவும், பொருளாதாரத்தை பரந்தளவில் பலப்படுத்தவும் முடியும் என இதன் துணை இலக்குகள் வலியுறுத்துகின்றன. எனவே, இத்கைய காரணங்களால் இவ்விலக்கு முன்வைக்கப்படுட்டுள்ளது. 

13. காலநிலைமாற்றங்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் எதிராக துரித நடவடிக்கை எடுத்தல். 

காலநிலை மாற்றங்கள் எல்லா நாடுகளின் மக்களின் வாழ்வு, பொருளாதாரம், சூழல் ஆகியவற்றைப் பாதித்து வருகின்றது. விருத்தியடைந்த நாடுகள் விரைவான பொருளாதார விருத்திக்காக அதிகரித்த வகையில் சூழல்வளங்களைப பயன்படுத்தாதமையால், சூழல் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும் விருத்தியடைந்து வரும் நாடுகள் பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்ள அதிகரித்த தொழில்மயமாக்கத்தில் எனவே எல்லா நாடுகளிலும் கட்டுப்பாட்டை ஏற்படுத்தி, சுற்றுச் சுழலைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. இதற்காக அனைத்து நாடுகளும் சர்வதேச ரீதியில் ஒத்துழைப்பை வழங்க வேண்டியுள்ளது. இவ்வகையில் இவற்றை நெறிப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் அவசியப்படுகின்றன. 

14. சமுத்திரங்கள், கடல், கடல்வளங்கள் ஆகியவற்றைப் நிலைத்துநிற்கும் வகையில் பயன்படுத்தல் பாதுகாத்தல்.

மனிதர்களின் உயிர் வாழ்விற்கு அடிப்படையானதாக இவ்வளங்கள் அமைகின ;றது. மனிதனின் உணவு, போக்குவரத்து, பொருளாதார, நீர் ஆகிய பிரதான தேவைககைளுக்கும், ஏனைய உயிரினங்களின் தேவைகளுக்கும் புவியின் சூழல் சமநிலைக்கும் இவை அடிப்படையானதாக அமைந்துள்ளது. இத்தகையவற்றில் ஏற்படுகின்ற தாக்கங்கள், பூமியின் இருப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இன்று 40மூ மான சமுத்திரங்கள் மனிதனின் நடவடிக்கைகளால் பாரியளவில் மாசுபடுத்தலுக்குள்ளாகியுள்ளது. இவை சமுத்திர உயிரினங்களின் இழப்பிற்குக் காரணமாகி வருகின்றது. எனவே இவற்றைக் கவனமாகக் கையாளவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தற்கால சமூகம் உள்ளாகியுளள்து. எனவே இருக்கின்ற இவ்வளங்களை நிலைத்துநிற்கும் வகையில் பயன்படுத்தும் வழிமுறைகள் அவசியமாயுள்ளது. 

15.காடுகளை முகாமைசெய்தல், காடழிப்பை எதிர்த்தல், அவற்றை மீள்சேமித்தல், நிலச் சீரழிவைத் தடுத்தல் மற்றும் உயிரினப் பல்வகைமை இழப்புக்களை நிறுத்தல்.

காடுகள், உயிரினங்களின் வாழ்விடமாகவும், அவற்றைப் பாதுகாக்கும் இடமாகவும், இயற்கைச் சமநிலையைப்பேணும் ஒன்றாகவும் அமைந்துள்ளது. அதேபோல. நிலவளம் மனிதனினதும், ஏனைய உயிரினங்களினதும் வாழ்விடமாக அமைந்துள்ளது. இவற்றில் ஏற்படும் பாதிப்புக்களால் காடுகளும், உயிரினங்களும் அழிவுக்குள்ளாகி வருகின்றது. இத்தகைய நடவடிக்கைகள், பூமியை உயிரினங்களின் இருப்புக்குப் பொருத்தமற்ற இடமாக மாறுவதற்கு இட்டுச் செல்லும் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. மனிதனின் பொருளாதார வளர்ச்சியை நோக்கிய கட்டுப்பாடற்ற நடவடிக்கைகளே இவற்றிற்கெல்லாம் அடிப்படையானதாகக் காணப்படுகின்றது. எனவே காடுகளையும், உயிரினங்களையும் பாதுகாப்பதன் மூலமாக மனித இருப்பை உறுதிப்படுத்தவேண்டியுள்ளது என்பதனை இவ்விலக்கு நியாயப்படுத்துகின்றது. 

16. நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்காக அமைதியான, பொறுப்புணர்வுள்ள அனைத்தையும் உள்ளடக்கிய நிறுவனங்களை உருவாக்குதல் 

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் கொள்ளை, இலஞ்சம், போன்றவற்றை ஒழிப்பதற்காக வருடாந்தம் கூ1.2ரில்லியன் பணம் செலவிடப்படுகின்றது. இப்பணத்தைக் கொண்டு இந்நாடுகளில் கடந்த 06 வருடமாக நாளாந்தம் 1.25வருமானம் பெறுகின்ற குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஒருவருடத்தில் முடியும் என சுட்டிக்காட்டப்படுகின்றது. எனவே எல்லோருக்கும் சமநீதி பெறுவதற்கான அணுகல்கள் அவசியம் வழங்கப்பட வேண்டும். இதற்காக எல்லா மட்டத்திலும் பயனுள்ள, பொறுப்புணர்வுள்ள சேவைகளை வழங்கக்கூடிய நிறுவனங்களை உருவாக்குவது அவசியம் என்பதனை இது வலியுறுத்துகின்றது. 

17. நிலைத்துநிற்கும் அபிவிருத்தியை அடைந்து கொள்ள உலகளாவிய கூட்டிணைப்பையும், அதன் பங்காளர்கள் புத்துணர்வுடன் செயற்படுவதற்குத் தேவையான நடைமுறைகளையும் வலுப்படுத்தல். 

இத்தகைய நிலைத்துநிற்கும் அபிவிருத்தியை அடைந்து கொள்ள அரசஅரசசார்பற்ற மற்றும் சிவில் சமூகங்கள் பங்களிப்பை வழங்கவேண்டும் என இது வேண்டுகின்றது. இதனது கொள்ளை, விழுமியங்கள், இலக்குகள் என்பன இந்நிறுவனங்களிடையே பகிரப்பட்டு, வினைத்திறனான முறையில் செயல்படுத்தப்படுவதனை இது வலியுறுத்துகின்றது. குறிப்பாக விருத்தியடைந்த நாடுகளும் விருத்தியடைந்துவரும் நாடுகளும் தங்களிடமிருக்கின்ற தொழிநுட்ப அறிவு, தகவல் ,வளங்கள் ஆகியனவற்றைப் பயன்படுத்தி இத்திட்டத்தை வெற்றிபெறச் செய்ய ஒத்துழைப்பு வழங்கப் பணிக்கின்றது. இவ்வாறு நிலைத்து நிற்கும் அபிவிருத்தியின் இலக்கானது, சமூகப் பொருளாதார சூழலியல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புதிய இலக்குகளை முன்வைத்துச் செயற்பட்டு வருகின்றது.


 சமூக மூலதனம்

ஒரு தனியாள் ஏதாவது பொருளாதார அல்லது வர்த்தகச் செயற்பாடுகளுக்காக மேற்கொள்ளும் முதலீடு அல்லது அர்ப்பணிப்புக்கு கிடைக்கும் பிரதிபயன் மூலதனத்தின் வயப்பட்டதாக அமையும். அந்த அடிப்படையில் சமூக மூலதனம் அதே போன்றதொரு விளைதிறன் மிகு முதலீடாகும். சமூக மூலதனம் அந்நியோண்ய நம்பிக்கை ஊடாகவும் புரிந்துணர்வின் ஊடாகவும் தனியாட்களிடேயே கட்டியெழுப்பப்படும் ஒரு ஒன்றிணைந்த சக்கியாகும். இந்த ஒன்றிணைந்த சக்தி வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் விளைதிறன் மிக்கதாக அமையும். 

ஆளிடைத் தொடர்புகள் மற்றும் அந்நியோண்ய அடிப்படைகளில் கட்டியெழுப்பப்படும் நம்பிக்கைகளின் ஊடாக சமூகத்தினுள் ஒரு தனியாளினால் தனியாக அடைய முடியாது என கருதப்படும் நோக்கங்களையும் குறிக்கோள்களையும் அடையக் கூடியதாக இருக்கும். தனியாட்கள் சமுதாய அடிப்படைகளில் கட்டியெப்பப்படும் நம்பிக்கைகள், ஒழுக்கம் மற்றும் ஆளிடைத் தொடர்புகளினூடாக பொருளாதார மற்றும் சமுதாய நன்மைகளையும் பெற முடிகின்றது என்பதை நிருபிப்பதற்காக ஆய்வாளர்கள் பல்வேறு விதமான ஆய்வுகளினூடாக முயற்சிக்கின்றனர்.

சமூகக்ககுழுக்கள் ஆரம்பமாகிய தினத்தில் இருந்து சமூக மூலதனம் ஆரம்பமாகி விட்டதாக சமூக ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மனிதன் தெரிந்தோ தெரியாமலோ சமூக மூலதனத்திற்குரிய வளங்களை சேகரிப்பதற்கு தொன்நெடுங் காலத்திலிருந்தே ஊக்கல் பெற்றிருந்தான்.

சமூக மூலதனம் ஒரு பிள்ளையின் தற்கால மற்றும் எதிர்கால இருப்பில் பங்களிப்பு செய்யும் குடும்ப ஒழுங்கமைப்பிற்குரிய வளமாக கருதப்படக்கூடியது என ஹோல்மன் (1998) குறிப்பிட்டுள்ளார். குடும்பக் கல்வி தொடர்பான சமூக மூலதனக் கோட்பாடு ஒரு குடும்பத்தில் தந்தைக்கு சமமாக சமூக மூலதனத்தை மதிப்பிட்டுள்ளது.

ஒரு தனிநபர் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு கல்விச் செயன்முறையிலும் சமூக மூலதனம் தொடர்புபடுத்தப்படுகின்றது. தொன்மைச் சமூகத்தில் அவை குடும்பத்தில் இருந்து முறைசாரா வகையிலும், முறையில் வகையிலும் பெற்றுக் கொள்ளப்பட்டது. தற்கால சமூகத்தில் பாடசாலைகளில் அல்லது வேறு கல்வி நிறுவனங்களில் முறைசார்ந்த அடிப்படையில் சமூக மூலதனத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய வழிமுறைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

ஒரு மாணவனுக்கு பாடசாலைக்கு வெளியே அவனது குடும்பம் மற்றும் சமூகத்தில் அவனுக்கு உரித்தாக உள்ள சமூக வளத்தின் அளவு அவனது சமூக மூலதனமாக இனங்காணத் தக்கதாக உள்ளது. இதில் அவனது பெற்றோர் கல்வி தொடர்பில் வெளிப்படுத்தும் மனப்பாங்கு அவனது பெற்றோர் தவிர்ந்த ஏனையோரின் இடைத்தொடர்பு போன்றவை கவனத்தில் கொள்ளப்படும்.

பெற்றோரின் சமூக மூலதனம் (குறிப்பாக அவர்களது கல்வியறிவு) பிள்ளைக்கு பரிமாறப்படுவதனால் பெற்றோர், பிள்ளை இடைத்தொடர்பு இறுக்கமானதாக அமைய வேண்டும். பிள்ளைக்கும் பெற்றோரில் இருவரில் ஒருவருக்கும் இடையில் இடைத்தொடர்பு காணப்படும் போது அவரின் கல்வி பிள்ளைக்கு பரிமாறப்படலாம். ஆனால் தாய், தந்தை இருவருக்குமிடையில் அந்நியோண்ய இடைத்தொடர்பு காணப்படும் போது அவர்கள் இருவரும் கலந்துரையாடி பிள்ளையிடம் மனப்பாங்கு விருத்தியையும் ஏற்படுத்துவர். 

பிள்ளையுடன் பெற்றோர் நீண்டகால இடைத்தொடர்பினை பேணும் அளவிற்கு அப்பிள்ளையின் சுய நம்பிக்கை கட்டியெழுப்பப்படும். இதுவே சமூக மூலதனமாக கருதப்படுகின்றது. ஆனால் துரதிஷ்ட வசமாக எமது பிள்ளைகளின் பலர் இவ்வாறான சமூக மூலதனத்தை இழக்கின்ற சூழ்நிலை அதிகமாகக் காணப்படுகின்றது. தாய் வெளிநாடு செல்லுதல், தந்தை வேறு திருமணம் செய்து குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லுதல், அதன் காரணமாக பிள்ளைகள் வயது முதிர்ந்த பாட்டியுடன் அல்லது உறவினர்களிடம் அதுவும் இல்லாதவர்கள் சிறுவர் இல்லங்களில் வசிக்கும் சூழ்நிலை காணப்படுகின்றது.

உறவினர்களிடம் வசிப்பவர்கள் சிறுவர் உழைப்பாளிகளாக பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள், சித்திரவதைக்கும் துஸ்பிரயோகத்திற்கும் உட்படும் சந்தர்ப்பங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. யுத்தத்தின் காரணமாக தாய், தந்தைகளை இழந்த குழந்தைகளும் இவ்வாறான நிர்க்கதி நிலையை அடைந்துள்ளனர். இதன் காரணமாக பிள்ளையிடம் எதிரிடையான பண்புக் கூறுகளே விருத்தியடையும் நிலை காணப்படுகின்றது.

ஒரு பிள்ளை, குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுடன் மற்றும் திறந்த சமூகத்தின் வேறு அங்கத்தவர்களுடன் கொள்ளும் இடைத்தொடர்பு மற்றும் நம்பிக்கையின் ஊடாக அவனது அறிவு,அனுபவம், சமூக ஆற்றல் என்பன விருத்தி பெறும். பாடசாலையில் சமூக மூலதனத்தை விருத்தியடைச் செய்வதானால் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்களிடேயேயான இடைத்தொடர்பை சக்திமிக்கதாக கட்டியெழுப்ப வேண்டும். ஆனால் நடைமுறையில் ஒவ்வொரு பாடசாலையும், பாடசாலை அபிவிருத்திச் சங்க கூட்டத்திற்குப் பெற்றோரை வரவழைப்பதற்கு பெரும்பாடு படுவதை நாம் கண்கூடாக காண்கிறோம்.

பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைகளிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கி விடுகின்றனர். ஆசிரியர்கள் தமது மாணவர்கள் தொடர்பில் பெற்றோருடன் கலந்;துரையாடும் சந்தர்ப்பங்களும் அருகி வருகின்றன. அமெரிக்காவின் சிக்காக்கோ மாநிலத்தின் பாடசாலைகளில் பெற்றோர் இணைப்பாட விதான செயற்பாடுகளில் பங்குபற்றியதால் மாணவர்களின் சமூக மூலதனம் விருத்தியடைந்த அதேவேளை  அவர்களது அடைவு மட்டமும் விருத்தி பெற்றமை கண்டறியப்பட்டுள்ளது.

ஹோல்மன் மற்றும் கொபர் (1987) ஆகியோர் கத்தோலிக்க மற்றும் தனியார் பாடசாலைகள் 1015 இன் 28000 மாணவர்களை 7 வருடங்கள் முழுவதும் (1980 – 1987) ஆய்வு செய்ததில் பெற்றோர், பிள்ளைகளின் இடைத்தொடர்பு சிறப்பாக காணப்பட்ட குடும்பங்களில் இருந்து  வருகை தரும் மாணவர்களில் சமூக மூலதனம் விருத்தி பெற்றிருந்ததை கண்டறிந்துள்ளனர். ஆசிரியருடன், மாணவர்களும் பெற்றோரும் கொள்ளும் இடைத்தொடர்பு, மாணவர்களின் பாடசாலை வருகை. அடைவு மட்ட விருத்தி ஆகியவற்றிற்கு சமூக மூலதனம் பங்களிப்புச் செய்யும் தன்மை இவர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஆசிரியர்கள் மீது கொள்ளும் நம்பிக்கை அதிகரிக்கும் போது அவர்கள் கற்றலில் ஊக்களுடன் செயற்படும் சந்தர்ப்பங்களும் அதிகரிக்கின்றன. உதாரணமாக பிரத்தியேக வகுப்பு ஆசிரியர்களிடம் மாணவர்கள் விருப்புடனும் நம்பிக்கையுடனும் செல்வதைக் காணலாம். ஒரு பாடசாலை ஆசிரியர் வெற்றிகரமாக திட்டமிட்டுச் செயற்படுவாரானால் மாணவர்களின் சமூக மூலதனத்தை மிக இலகுவாக கட்டியெழுப்பி பேண்தகு அபிவிருத்திக்கு உதவலாம.;

சிறந்த சமூக மூலதனத்தை கடமையாகக் கொண்ட மாணவர்களிடம் பின்வரும் குணாதிசயங்கள் சில காணப்படும். என சமூக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அவையாவன,

1. அந்நியோண்ய நம்பிக்கையை கட்டியெழுப்புவர்

2. சமூக ஒற்றுமையை பின்பற்றுவதுடன் அந்த ஒற்றுமையை பொருளாதார பௌதிக வாழ்க்கை நிலைமைகளை சிறப்பாக்குவதற்கு பயன்படுத்துவர்

3. குழுச் செயற்பாடுகளில் வினையாற்றலுடன் பங்குபற்றுவர்

4. சமூகத்தில் ஒன்றிணைந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவர்

5. சுயேச்சையாக பொது வேலைத்திட்டங்களில் ஈடுபடுவார்.

6. உயர் சமூக வகுப்புகளுக்கும் தாழ் சமூக வகுப்புக்களுக்குமிடையிலான சமூக ஈடுபாட்டை விருத்தி செய்வர்

7. சமூகத்தின் அடிப்படை நிறுவனங்களான அரசாங்கம், கல்வி, சமயம, அரசியல் சட்டம் ஆகிய துறைகள் நம்முடையதே என்ற எண்ணத்துடன் செயற்படுவார். 

8. கலாசார விழுமியங்களை வளப்படுத்தக் கூடிய ஒழுக்கமும் அந்நியோண்ய நம்பிக்கையும் விருத்தி செய்யப்படுவதற்காக சர்வமத வணக்க ஸ்தலங்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வர்.  இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக பேண்தகு அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.

கலாசார மூலதனம்

சமூக ஆற்றல்களை அடிப்படையாகக் கொண்ட சமூக மூலதனத்தைப் போன்று கலாசார மூலதனமும் மாணவர்களின் கல்வியில் மிகுந்த செல்வாக்குச் செலுத்துகின்றது. கலாசார மூலதனம் என்பது பெரும்பாலும் ஒருவரிடம் அரவது குடும்பாத்தால் உருவாக்கப்பட வேண்டிய குறியீடு சார்ந்த வளமாகும். நடைமுறையில் இந்த குறியீடு சார்ந்த வளத்தை தனியாளிடம் கட்டியெழுப்ப வேண்டிய வகிபாகத்தை பாடசாலை ஏற்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது. இந்த வளம் கலாசார மூலதனமாக அமையும் அதேவேளை பொருளாதார முக்கியத்துவமிக்கதாகவும் அமைகிறது. இவ்வாறான வளம் தனவந்தர்களிடமே காணப்படக்கூடியது என்ற அபிப்பிராயமும் சில குடும்பங்களில் காணப்படுகின்றது.

கலாசார மூலதனத்தை இனங்காண்பதற்கு அது தொடர்பில் முன்வைக்கப்பட்ட வரைவிலக்கணங்கள் உதவுவனவாக அமைகின்றன. ஒரு தனியாளின் நிதி மற்றும் சமூக மூலதனத்திற்கு பங்களிப்பு செய்யும் கலாசார அறிவே கலாசார மூலதனம் என குறிப்பிடப்படுகின்றது.

பியரே போதியோ சிறப்பான கலாசார நம்பிக்கை, சம்பிரதாயங்கள், நடத்தைகள் போன்றவைகள் கலாசார மூலதனத்துள் அடங்கும் என்கிறார். அத்துடன் கலாசார மூலதனம் வாழ்க்கையின் வெற்றிக்கும் வழி வகுக்கும் எனக் குறிப்பிடுகின்றார்.

கலாசார மூலதனம் என்னும் விடயத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் பியரே போதியோ மற்றும் ஜீன் கிளவுட் பெசரன் ஆகியோவராவர். இருவரினாலும் 1960 களில் பிரான்சின் கல்வி நிலையில் மாற்றங்களை தெளிவுபடுத்துவதற்கு முயற்சிக்கப்பட்ட போது உருவாகியதே இந்த எண்ணக்கருவாகும்.

பின்னர் இந்த எண்ணக்கரு விபரிக்கப்படும் போது சமூகத்தொடர்பு, பல்வேறு பொருட்கள், சமூக வலு மாற்றம், சமூக நிலை போன்ற எண்ணக்கருக்களுடன் தொடர்புபடுத்தப்பட்டது. என போதியோ குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த எண்ணக்கரு தொடர்பில் ஆழமான கருத்தை முன்வைத்த போதியோ மூலதனம் என்பது பொருளாதார பெறுமதி மாத்திரம் கொண்டதல்ல சமூக நிலையை தீர்மானிக்கக்கூடிய எந்நவொரு வளமும் இதனுள் அடங்குவதாக இருக்கும். இதன் கீழ் சமூக மூலதனம் மற்றும் கலாசார மூலதனம் ஆகியவை முழுமையான மூலதனத்தின் பகுதிகளாகக் கொள்ளப்படும் என்கிறார்.

ஒரு பிள்ளையின் கல்வியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செல்வாக்குச் செலுத்துகின்ற காரணிகளான குடும்பம், பாடசாலை, சமவயதுக்குழுக்கள், ஊடகங்கள் போன்றவற்றின் ஊடாக கலாசார மூலதனம் விருத்தி பெறும் தன்மை காணப்படுகின்றது.

கல்வியில் வெற்றியடைய கலாசார மூலதனத்தைப் பயன்படுத்த மூன்று நிபந்தனைகளை பூர்த்தி செய்தல் வேண்டும் என போதியோ குறிப்பிட்டுள்ளார். அவையாவன

1. பெற்றோருக்கு கலாசார மூலதனம் இருத்தல் வேண்டும்

2. அவர்கள் தமது பிள்ளைகளுக்கு அவற்றை ஒப்படைத்தல் வேண்டும்.

3. பிள்ளைகள் அவற்றை உள்வாங்கி தமது கல்வி அபிவிருத்திக்குப் பயன்படுத்துதல் வேண்டும். 

இதற்கேற்ப பிள்ளையின் கல்வி அபிவிருத்தி தொடர்பில் கலாசார மற்றும் அவை தொடர்பான பௌதிகக் காரணிகள் அனைத்தும் பங்களிப்பு செய்வதை உறுதிப்படுத்தியுள்ளனர். இவை பேண்தகு அபிவிருத்திக்கும் உதவுவதைக் காணலாம்.

பொருளாதார சமூக மற்றும் கலாசார மூலதனத்தைக் கொண்ட குடும்பங்கள் மிகுந்த போட்டித்தன்மை கொண்ட பாடசாலைகளையும் பல்கலைக்கழகங்களையும் தெரிவு செய்வதையும் அரச பல்கலைக்கழகங்கள் கிடைக்காத சந்தர்ப்பங்களில் பெருமளவு பணச் செலவில் தனியார் பல்கலைக்கழகங்களில் தமது நோக்கங்களை பூர்த்தி செய்வதையும் அவதானிக்க முடிகின்றது.

பொருளாதார மூலதனம்

பேண்தகு அபிவிருத்திக் குறிக்கோள்களுள் சில குறிக்கோள்கள் பின்வருமாறு உள்ளது. அவையாவன,

வறுமையை அனைத்து மட்டங்களிலும் அனைத்து இடங்களிலும் ஒழித்தல், 

பசியால் வாடுதலை முடிவுறுத்தல், 

ஏற்றுக் கொள்ளக்கூடிய உள்ளீர்க்கப்பட்ட பேண்தகு பொருளாதார வளர்ச்சி பூரண உற்பத்தித்திறனுடைய வேலை வாய்ப்புக்கள் மற்றும் அனைவரும் கௌரவமான தொழில்களைப் பெற்றுக் கொள்வதை மேம்படுத்தல், 

மீள்கட்டமைப்பு வசதிகள், உள்ளீர்ப்பு, பேண்தகு கைத்தொழில் மயமாக்க மேம்பாடு மற்றும் புதிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கைத்தொழில்களை விருத்தி செய்வதன் மூலமாக பேண்தகு தன்மை, வளங்களின் பயன்பாட்டில் வினைத்திறனை அதிகரித்தல் தூய்மையான மற்றும் சூழலுக்கும் நட்பான தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தல்.

நாடுகளுக்குள்ளும், நாடுகளுக்கிடையேயும் உள்ள ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல். போன்ற குறிக்கோள்களை அடைந்து பேண்தகு அபிவிருத்தி நிலையினை ஏற்படுத்த கல்வியினால் அடையப்பட்ட பொருளாதார மூலதனமே உதவும் என்பதில் ஐயமில்லை.

சமூகத்தில் வாழும் ஒவ்வொரு தனி நபரும் தமது வாழ்வுடன் ஏதோ ஒரு தொழிலை இணைத்துக் கொள்ள வேண்டியுள்ளது வாழ்வின் வசதிகள், விழுமியங்கள், முன்னேற்றம், சமூக அந்தஸ்து, நீண்ட கால பாதுகாப்பு, தலைமுறை முன்னேற்றம் போன்ற அனைத்தும் ஒருவரது வாழ் தொழிலை பொறுத்ததாகவே அமைகிறது. தனிநபர் மகிழ்ச்சி, சிறப்பு என்பவற்றையும் குடும்ப முன்னேற்றம், சமநிலை என்பவற்றையும் வாழ்தொழில் தீர்மானிக்க வல்லதாகும். 

வாழ்தொழில் தன்மை, முக்கியத்துவம் தொடர்பாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொழில்களின் மதிப்பு அல்லது தரநிலை என்பது சம்பள அளவு, வேலை நேரம், வேலை மாதிரி, தொழில் வசதிகள், மேலும் அது முன்னேறுவதற்கு அது கொண்டிருக்கும் இயலுமை போன்ற பல்வேறு காரணிகளினால் நிர்ணயிக்கப்படுகின்றது. இவை வாழ்க்கைத் தரத்தையும் சமூக அந்தஸ்த்தையும் தீர்மானிக்க வல்லன. 

நாடுகளின் பேண்தகு அபிவிருத்தியில் பிரதான குறிக்கோள் வறுமையினை அகற்றுவதாகும். அதன் மூலம் வறியோரை உற்பத்தித் திறனுடையவர்களாக மாற்றுவது. அதன் வழியாக தங்கியிருப்போர் என்ற நிலையில் இருந்து அவர்களை பங்களிப்புச் செய்வோர் அல்லது பொருளாதார செயற்பாடுகளில் பங்கேற்போராக மாற்றுவதாகும். வறியவர்களை வறுமையில் இருந்து வெளியே இழுத்தெடுப்பது தொடர்பான கொள்கைகளை வடிவமைப்பதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் பொருளியலாளர் கவனம் செலுத்துகின்றனர். அவர்களது கவனயீர்ப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ள முக்கியமான விடயங்களுள் ஒன்று அவர்கள் தமது வறுமையின் தன்மை, அதன் கொடிய பாதிப்புக்கள், அதன் பரவல் வலு என்பவற்றை உணர்ந்து கொள்ளச் செய்வதாகும். அவ்வாறு உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றலையும் இயலுமையையும் அவர்களுக்கு வழங்க வேண்டும். அதற்கான சிறந்த வழி முறையே வறியவர்களுக்கு கல்வி வழங்குவதாகும். இதற்கு பொருளாதார மூலதனம் முக்கியமானதாக அமைகின்றது.

முடிவுரை

எனவே கல்வியினால் கிடைக்கப் பெறும் சமூக, பொருளாதார மற்றும் கலாசார மூலதனங்கள் பற்றியும் இவை பேண்தகு அபிவிருத்திக்கு உதவும் விதம் தொடர்பாகவும் மேலுள்ள விடயங்கள் ஊடாக அறிந்து கொள்வதுடன், பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் 2030 ஆம் ஆண்டு நிறைவடையும் போது எந்தளவு முழுமையாக அடைய பெறும் என்பது பற்றி கணிப்பீடு செய்வது கடினமாகவே உள்ளது.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.