Sunday, June 18, 2023

 

இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள். துறைசார் வல்லுனர்களாக, நிபுணர்களாக, சமூகத்தையும் பிரதேசத்தையும் நாட்டையும் நல்வழிப்படுத்துபவர்களாக எதிர்காலத்தில் மிளிரவுள்ள தற்கால மாணவர்கள் நற்பண்புகளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழிகாட்டப்படுவது பெற்றோரினதும் ஆசிரிய சமூகத்தினதும் சமூகத்தில் அங்கம் வகிக்கும் பெரியவர்களினதும் தலையாய பொறுப்பாகும்.

 

இப்பொறுப்பு தவறும்பட்சத்தில், ஆரோக்கியமற்ற, சமூக விரோத செயற்பாடு-களில் ஈடுபடக் கூடிய சமூகமொன்றையே நாம் எதிர்காலத்தில் காண முடியும். அவ்வாறான நிலை உருவாக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின், இன்றைய மாணவர்கள் ஒழுக்க விழுமியத்துடனும் பண்பாட்டுக் கலாசாரங்களுடனும் ஆன்மிக ஈடுபாட்டுடனும் வாழக் கூடியவர்களாக வீட்டுச் சூழலிலும் பாடசாலைகளிலும் வழிபாட்டுத்தலங்களிலும் வழிகாட்டப்பட வேண்டியது காலத்தின் தேவையாக மாறியுள்ளது.

 

அறிவு மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியினால் எவையெல்லாம் நவீன கலாசாரமென்று அறிமுகப்படுத்தப்படுகிறதோ, அவையெல்லாம் அநாகரிகமாக மாறி, நாளைய தலைமுறையினரை அழித்துக்கொண்டிருக்கின்றன. நவீன கலாசார மோகத்திற்குள் தள்ளப்பட்டுள்ள மாணவ சமூகமும் இளைஞர், யுவதிகளும் தங்களைத் தாங்களாகவே அழித்துக்கொள்வதையறியாது அழிந்துகொண்டிருக்கிறார்கள்.

 

பேஸ்புக் என்றும் சமூக வலையத்தளங்கள் என்றும் தொலைபேசிப் பாவனை என்றும் போதைவஸ்துப் பயன்பாடு என்றும் அவைகளுக்குள் மூழ்கி கால நேரங்களையும் பணத்தையும் வீண்விரயம் செய்து அழிவினதும் ஆபத்தினதும் விளைவுகளை விளங்கிக் கொள்ளாமல் அல்லது விளங்கியும் அவற்றிலிருந்து விடுதலை அடைந்து கொள்ள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். சமூக மயமாக்கலில் ஏற்படும் தவறுகள் இளைய தலைமுறையினரை இவ்வாறான படுபாதாளத்தில் தள்ளிக் கொண்டிருக்கின்றன.

 

வாழும் சூழல் மற்றும் சமூகத்திற்கு ஏற்ற வகையில் வாழப் பழகிக் கொள்ளும் நெடுங்கால செயன்முறையை சமூக மயமாக்கல் என்று கூறப்படுகிறது. ஒரு மாணவனின் சமூக மயமாக்கலில் குடும்பம், சம வயதுக் குழுக்கள், பாடசாலை, கல்வி நிறுவனங்கள், மத வழிபாட்டுத்தலங்கள் என்பவற்றிற்கு மேலாக ஊடகமும் தாக்கம் செலுத்துகிறது. ஒரு பிள்ளை ஒழுக்க விழுமியமுள்ள பண்பாட்டுக் கலாசாரத்துடன் வீட்டுச் சூழலில் வளர்க்கப்படுமாயின் அப்பிள்ளை பாடசாலைச் சூழலில் ஏற்படும் பண்பாட்டு மாற்றத்தினாலும் சம வயதுக் குழுக்களின் அழுத்தங்களினாலும் வழிதவறிச் செல்வதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படும். பிள்ளையின் நடத்தை, மனவெழுச்சிச் செயற்பாடுகள் தொடர்பில் பெற்றோர்களும் குடும்பத்தாரும் கவனத்திற்கொள்ளாது செயற்படுகின்றபோது அப்பிள்ளை சம வயதுக் குழுக்களினால் திசைமாற்றப்படுவதைத் தடுக்க முடியாது.

 

அந்தவகையில், தற்காலத்தில் பாடசாலை மாணவர்கள் ஒரு வித போதைப்பொருள் பாவனைக்கு தங்களை அடிமைப்படுத்தி வருவதாக அறிய முடிகிறது. நகரப் புறங்களில் மாத்திரமின்றி, கிராமப் புறங்களிலும் இந்நிலை விரைவாக பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

2020ஆம் ஆண்டில் போதைப்பொருள் பாவனையற்ற நாடாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இக்காலகட்டத்தில், போதைப் பொருள் நாட்டிற்குள் கொண்டு வரப்படுவதையும், விற்பனை செய்யப்படுவதையும். பயன்படுத்தப்படுவதையும் இன்னும் தடுக்க முடியாமலே உள்ளமை துரதிஷ்ட வசமாகும். சட்டம் முறையாகச் செயற்படுத்தப்படாமையும் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களின் பணியில் காணப்படும் வழுக்கலுமே போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதையும் பயன்படுத்தப்படுவதையும் விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க முடியாமல் உள்ளதாக சமூகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

தற்போது நமது மாணவர்கள் மத்தியில் பாபுல், பீடா, பன்பராக், மாவா போன்றவற்றின் பாவனைகள் அதிகரித்துவிட்டதாக அறிய முடிகிறது. சில மாணவர்கள் வகுப்பறைகளுக்குள்ளேயே இவற்றைப் பயன்படுத்துவதாகவும் தெரிய வருகிறது.

 

மிகவும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும், வீதியோரக் கடைகளிலும் பாடசாலைச் சூழலிலும் விற்கப்படும் இத்தகைய பொருட்கள் 2006 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மதுசாரம் மற்றும் புகையிலைத் தடைச் சட்டத்தின் கீழ் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தடுக்கப்பட்டுள்ள இப்பொருட்கள் தடையின்றி விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்கு சட்டம் சரியாக அமுல்படுத்தப்படாமல் இருப்பது இந்நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கலாம்.

 

அநாகரிக கலாசாரத்திற்குள் மூழ்கித் தத்தளிக்கும் மாணவர்கள் போதை தரக் கூடிய பாவனைப் பொருட்களின் பயன்பாட்டுக்கும் ஆளாகி தங்களைத் தாங்களாவே அழித்துக் கொண்டிருக்கிறார்கள். மாவா என்ற பெயர் உலக பிரபல்யங்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் கையடக்கத் தெலைபேசிகளின் பெயர் போன்று தற்காலத்தில் சில போதையை ஏற்படுத்தும் பொருளின் பெயரும் மாணவர்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்துள்ளது.

 

புகையிலையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்ற சிகெரட் போன்ற பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படுகின்ற உடற்பாதிப்பு போன்றே இந்த மாவாவைச் சப்புவதாலும் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது. இந்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே அதிகளவில் காணப்படும் இத்த-கைய போதை தரக் கூடிய பொருட்களின் பயன்பாட்டின் விளைவுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் மாவாவை பயன்படுத்து-பவர்களிடையே இதய மற்றும் சுவாசப் பிரச்சினைகள் காணப்படுவது கண்-டறியப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தளம் குறிப்பிடுகிறது.

 

பணத்தை மாத்திரம் மையப்படுத்தி போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோர். வளரும் இளம் சந்ததியினரை ஆண்மையற்றவர்களாக பிள்ளைப் பேற்றில் பலவீனமானவர்களாக இன்னும் பல்வேறு உடல் உபாதைக்கு தளப்படக் கூடியவர்களாக மாற்றுகிறார்கள் என்பதை மறந்து இவர்கள் பணத்தில் கொண்ட பேராசையினால் இத்தகைய போதைப் பொருட்களின் விற்பனையில் ஈடுபடுகிறார்கள். இத்தகையவர்களின் பண ஆசைக்கு பலியாகும் அப்பாவி மாணவர்களைக் காப்பாற்ற வேண்டியது பெற்றோர்களி-னதும் ஆசிரியர்களினதும் கட்டாயப் பொறுப்பாகவுள்ளது.

 

தங்களது பிள்ளைகளின் செயற்பாடுகளில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துவதோடு பிள்ளையின் சமவயதுக் குழுக்கள் மற்றும் நண்பர்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். அத்தோடு, பாடசாலைகளில் மாணவர்களின் இத்தகைய பொருட்களின் பயன்பாடு குறித்து பாடசாலைச் சமூகம் அசமந்தப் போக்கில் செயற்பாடாமல் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களது பிள்ளை போன்று ஏனைய பாடசாலை மாணவர்களையும் கவனத்திற்-கொண்டு உரிய ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்க வேண்டும். பாடசாலைகளில் உள்ள வழிகாட்டல் ஆலோசனைச் செயற்பாடானது வினைத்திறன் மிக்கதாக காணப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் காணப்படுகிறது. இதைத் தவிர்த்து, தொழில்வான்மை உளவளத் துணையாளர்களின் உதவி கொண்டு இந்த வழிகாட்டல் ஆலோசானைச் செற்பாடுகள் தொடர்ச்சியாக வினைத்திறனுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். இவை தவிர, வழிபாட்டு தளங்களிலும் போதை வஸ்த்துப் பாவனை மற்றும் விற்பனை தொடர்பில் பெற்றறோர்களையும் மாணவர்க-ளையும் நல்வழிப்படுத்தும் வகையில் ஆன்மீக ரீதியாக விழிப்புணர்வூட்டப்படுவதும் அவசியமாகும்.

 

அத்துடன், சட்டத்தை அமுல்படுத்துகின்ற பொலிசாரும் அதிகாரிகளும் தய-வு தாட்சண்யமின்றி, சட்டத்தை மீறி இத்தகைய போதைப்பொருள் விற்-பனை மற்றும் பயன்பாட்டில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை முறை-யாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

 

இவ்வாறு ஒரு மாணவனின் சமூக மயமாக்கலில் தாக்கம் செலுத்துகின்றன ஊடகம் உட்பட சமூகமயமாக்கல் முகவர்கள் தமது பொறுப்பை முறையாக செயற்படுத்தும் போதுதான் மாணவ சமூகத்தை உடல் ஆரோக்கியததைக் கெடுக்கும் போதைப் பொருட்களின் பாவனையிலிருந்து பாதுகாப்பதோடு விழுமியங்களை மதிக்கும், விழுமியங்களைப் பாதுகாக்கும். விழுமியங்க-யோடு வாழக் கூடிய சமூகப் பிரஜைகளாக மாற்ற முடியும். அதற்காக சமூ-கமயமாக்கல் முகவர்கள் தங்களது பொறுப்பை காலத்தின் அவசியம் உணர்ந்து நிறைவேற்றுவதும் அவர்களின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் சமகாலத்தின் கட்டாயத் தேவையாகவுள்ளது.

0 comments:

Post a Comment