Monday, June 19, 2023



பெற்றோர்களுக்கான வழிகாட்டல்
ஒரு பிள்ளையின் உயிரியல்சார் விருத்தியும் (நரம்பியல்சார்) எண்ணக்கரு உருவாகும் திறனும் அவனது முழுமையான அறிவாற்றல் முதிர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியம் என்னும் கருத்தில் பியாஜே வலுவாக உள்ளார். இதன் பிரகாரம் பிள்ளையின் முதல் நான்கு வருட வாழ்வில் பிள்ளை போசாக்குடனும் நோயின்றியும் வளர்க்கப்பட வேண்டும் என்பதும் பொருத்தமான உளத்தொழிற்பாட்டை தூண்டக்கூடிய புலனனுபவங்களை வழங்கக் கூடியவாறு பெற்றோர் செயற்படவேண்டும்.

குழந்தைகள் குழந்தைகள்தான் அந்தந்த வயதில் அவர்களுக்கு உடல் வளர்ச்சி, உளவளர்ச்சி, என்பன மாறிக்கொண்டே இருக்கும். உங்களுடைய எதிர்பார்ப்பு யதார்த்தமாக இருக்க வேண்டும். பெரியவர்கள் சிந்திப்பதுபோல் குழந்தைகளும் சிந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. நல்லொழுக்கம், நற்பழக்கங்கள், சுயகட்டுப்பாடு, நேர்மையாக நடந்து கொள்ளுதல், பிறரிடம் அன்பு பாராட்டுதல் ஆகிய குணங்களை சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டும். உங்கள் குழந்தைக்கென்று ஒரு தனித்தன்மை இருக்கும் உருவத்தில் உங்களை ஒத்திருக்கலாம் ஆனால் சிந்தனை , செயற்பாடுகளில் வித்தியாசப்படலாம். உங்கள் குழந்தைகள் அவர்களின் இயல்பான திறமையினை வெளிப்படுத்த அவர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். குறைவான எழுத்தறிவு உடைய பெற்றோரின் வாசிப்பில் மோசமாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றது. பிள்ளை பிரயோகிக்கும் சொற்களின் பொருளை பிள்ளை விளங்கியிருக்கும் என்பதை முற்றாக ஏற்றுக்கொள்ள முடியாது. உதாரணம் அப்பா வேலைக்குச் சென்றார். இதில் வேலை என்பதன் பொருளை பிள்ளை அறிந்திருக்கும் என பெற்றோர் நினைப்பதை ‘பியாஜே’ முற்றாக நிராகரிக்கிறார். எனவே பெற்றோர் பிள்ளை பிரயோகிக்கும் வார்த்தையின் பொருளை அறிந்திருக்கிறதா என்பதில் அக்கறை செலுத்த வேண்டும். பிள்ளை அறியாத பொருள் விளக்கங்களை பெற்றோர் பிள்ளைக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
குழந்தைப் பருவத்தில் பெற்றோர் பிள்ளைகளில் அன்பு செலுத்தும்போது பிள்ளைகளள் அதனையொரு பாதுகாப்பான இடமாகவே உணருவர். பெற்றோரிடமிருந்து நல்ல தொடர்பினை பெற்றுக்கொள்ள முடியாமல் போன குழந்தைகள் பாடசாலையிலும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுவார். பிள்ளைகள் சில நேரங்களில் தம்மால் கட்டுப்படுத்தமுடியாத கோபம், அடம்பிடிப்பு போன்றவற்றைச் செய்யும் போது பெற்றோர் அவர்களைத் தண்டிக்காமல் வேறு ஏதாவது விடயங்களினூடாக அவர்களைத் திசைதிருப்பி மனமுறிவைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இப்பருவத்தில் அவர்களின் மனவெழுச்சி தற்காலிகமாகவே இருக்கும். பெற்றோரால் மனவெழுச்சியின் போதான சந்தர்ப்பங்கள் சரியாகக் கையாளப்படாவிட்டால் பிள்ளைகளிடையே உளவியல் பாதிப்புக்களும் ஏற்படலாம். பிள்ளை பாடசாலைக்குச் செல்ல ஆரம்பித்தாலும் பிள்ளையின் அறிவுசார் விருத்தியில் பெற்றோருக்கும் பாரிய பொறுப்புண்டு. இதற்கு வீடு முக்கியமானதொரு தூண்டியாக இருக்கிறது. பிள்ளை தமது எண்ணக்கருக்களையும் சிந்தனை ஆற்றலையும் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் விருத்தி செய்யும். பிள்ளைகளை பெற்றோர் உறவினர் வீட்டுக்கோ அல்லது விருப்புக்குரிய இடத்திற்கோ கூட்டிச் செல்லும் போது பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையில் பிணைப்பு ஏற்படுவதுடன் அறிவுசார் விருத்தியும் ஏற்படும்.

 
ஆசிரியர்களுக்கான வழிகாட்டல்

மனித வாழ்வின் பிரதான அறிவுசார் விருத்திப் பருவங்களாக 1. புலனியக்கப்பருவம் (0 – 2 வருடங்கள்) 2. தூலசிந்தனைக்கு முற்பட்ட பருவம் (2 – 7 வருடங்கள்) 3. தூல சிந்தனைப்பருவம் (7 – 11 வருடங்கள்) 4. நியம சிந்தனைப்பருவம் (11 – 15 வருடங்கள் ) என நான்காக வகுத்துள்ளார். எனவே பிள்ளையின் விருத்தி பருவத்தினைப் பற்றிய அறிவு ஆசிரியருக்கு மிக முக்கியமானதாகும். பியாஜேயின் வயதுப் பருவத்தினை நாம் கால வயது என்பதிலும் பார்க்க உள வயது என அடையாளம் காண வேண்டும். அவ்வாறாயின் பலதரப்பட்ட புலனனுபவங்கள் பிள்ளையின் விருத்தி நிலைகளை மேம்பாடடையச் செய்யும் என்பது திண்ணம். நடைமுறையில் குறித்த ஒரு பருவம் வயதுடன் தானாகக் கனியும் எனக்காத்திராது பொருத்தமான அனுபவங்களை பிள்ளைக்கு வழங்க வேண்டும். தரம் - 6 வரையிலான பாடசாலைச் செயற்பாடுகளில் பருப்பொருட் பயன்பாடு கற்பித்தலில் ஏறத்தாழ முழு அளவில் இடம்பெற வேண்டும். ஆயினும் கட்டிளமைப் பருவம் வரை முடியுமானளவுக்குப் பாடங்கள் யாவும் பருப்பொருட் பயன்பாட்டுக்கூடாகவே முன்னேற்றுதல் சிறந்த பயனை விளைவிக்கும். அதே நேரத்தில் கருத்து நிலைச் சிந்தனையை ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களில் அதனையும் தூண்டிவிட வேண்டும். இடைநிலை மட்டத்தில் ஆற்றல் குன்றிக் காணப்படும் மாணவர்களுக்கு முன்தொழிற்பாட்டுப் பருவ அனுபவங்களையும் பாடத்துடன் சேர்த்து வழங்குவதன் மூலம் அவர்களது உள விருத்தியை ஏற்படுத்த முடியும். பிள்ளைகளில் எற்படுகின்ற எண்ணக்கருக்களின் வகை, தரம் மற்றும் இயல்புகள் என்பவற்றில் தனியாள் வேறுபாடுகள் உள்ளன என்பதும், உள விருத்தியானது எல்லோரிடமும் ஒரே சீராக முன்னேறுவதில்லை என்பதும் ஆசிரியர் கருத்தில் கொள்ள வேண்டும். அறிகை விருத்தியின் படிமுறை உயர்ச்சித் தன்மை காரணமாக குறித்த ஓர் உயர்நிலை எண்ணக்கரு உருவாகும் முன் அதனுடன் தொடர்புடைய தாழ்நிலை எண்ணணக்கருக்கள் அல்லது உளத்திரளமைவு எற்பட்டிருத்தல் அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது. எண்ணக்கரு உருவாக்கத்தில் மொழியின் செல்வாக்கு மிக உயர்வானது எனவே, பொருத்தமான புலனனுபவங்களை வழங்குவதுடன் ஆசிரியர் மாணவர் இடைவினையில் மொழிப்பிரயோகம் முக்கிய பங்கு பெறவும் வேண்டும். கற்றல், கற்பித்தல் தொடர்பான பல கருத்துக்களை முன்வைத்த புறூனர் கற்பதற்கான முன் உளச்சாய்வுநிலை, அறிவமைப்பு, வரிசைக்கிரமம், மீளவலியுறுத்தல் ஆகிய நான்கு அம்சங்களை உள்ளடக்கியதாக ஒரு கற்றற் கொள்ளை அவசியமென வலியுறுத்தகின்றார். பாடசாலைக்கு வருகின்ற பிள்ளையிடம் கற்கதற்கான விருப்பையும் அனுபவங்களையும் அதற்கான ஆற்றலையும் ஏற்படுத்தக்கூடிய பாடப்பொருளையும் பற்றிய விபரங்கள் முதலில் முக்கியமாகின்றன. அதாவது பாடத்தைக் கற்க வருமுன்னரே இதனைக் கற்பதற்குச் சார்பான ஒர் உளநிலை கற்போனிடம் இருத்தல் அவசியமாகும். கற்போனினால் இலகுவாக விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் அறிவுத் தொகுதியை அமைப்பாக்கிக் கொடுக்கும் வழிமுறைகள் அடுத்து முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றுடன் வினைத்திறன் மிக்க கற்றலை ஏற்படுத்தும் பாட விடயங்கள் மாணவனுக்கு வழங்கப்பட வேண்டிய ஒழுங்கு முறையும் ஒரு முக்கிய அம்சமாகக் கொள்ளப்படுகின்றன. புறூனர் செயல்வடிவப் படிநிலை, உளப்பட வடிவப் படிநிலை, குறியீட்டு வடிவப் படிநிலை ஆகிய விருத்திப் படிநிலைகள் ஊடாக உலகைப் பற்றிய அறிவினைப் பிள்ளைகள் பெறுவதாக குறிப்பிடுகின்றார். பிள்;ளைகளுக்கு பாடத்தை வழங்கும்போது அவர்களின் அனுபவம் சார்பான ஓர் ஒழங்கு வரிசையில் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை புறூனரின் அறிகை விருத்திப் படிநிலைகள் தெளிவுபடுத்துகின்றன. முதலில் பொருட்களை கையாளவிட்டுப் பொருத்தமான புலக்காட்சியை பெறவைத்து இறுதியில் மொழி மற்றும் குறியீடுகளுடன் ஈடுபட வைத்தல் கற்பித்தவுக்கான ஒரு சிறந்த ஒழுங்கு முறையாகும். பிள்ளையின் தொடர்பாடல் திறனை வளர்ப்பதற்கு வினாவுதல் செயற்பாடு மிக முக்கியமானதாகும். வினாக்களை கேட்கும் திறனானது தமக்கு வேண்டிய தகவல்களை பிள்ளைகள் பெற்றுக் கொள்வதற்கு உதவுவதுடன் அவர்களின் கற்றலை நெறிப்படுத்தவும் உதவுவதால் வினாக்களை கேட்கும் திறனானது பிள்ளையின் விருத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. விகொட்ஸ்கி என்பவரின் கருத்துப்படி இதுவே முயற்சிக்கவனம், திட்டமிடல், பிரச்சினை விடுவித்தல் ஆகியவற்றுக்கு அத்திவாரம் இடுகின்றது என்கின்றார். எனவே பிள்ளையின் விருத்தி பற்றிய அறிவினை ஆசிரியர்கள் பெற்று கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதனால் கற்றல் பயனுறுதி வாய்ந்ததாக அமையும்.

0 comments:

Post a Comment