Wednesday, June 14, 2023

அறிமுகம்

மனிதன், இயற்கை, சமுதாயம், அறிவு, மதிப்புகள், கருத்துகள் என அனைத்தும் மாறியவண்ணம் உள்ளன. உண்மை என்பது ஒருவர் பெறும் அனுபவமே, அனுபவம் என்பது ஒருவரது சிந்தனை, செயல், உணர்வு ஆகிய மூன்றையும் உள்ளடக்கியதுதான், நிரந்தர உண்மை என்ற ஒன்று இல்லை. அறிவு என்பது அனுபவத்தில் விளைகின்ற பயன். உண்மை, அனுபவம் செயல்முறைக்கு பயன்படுகிறது. செயல்தான் அறிவுக்கு முன்னோடிாக விளங்குகிறது. சிந்தனையைக் காட்டிலும் செயலே முதன்மை பெறுகிறது. 

பிரபஞ்சத்தில் முழுமையான மதிப்புகள் என்றும் நிலையான அறப்பண்புகள் என்றும் எதுவும் இல்லை. மதிப்புகளை, மனிதன் தானே படைத்துக் கொள்கிறான். எல்லாப் பொருள்களும் மனிதன் மூலமாகத்தான் அளிக்கப்படும் தன்மையைப் பெறுகின்றன. நற்செயல் அல்லது அறச்செயல் என்பது, அதனால் பெறப்படும் பயன்களை ஒட்டியேதான் மதிப்பிடப்படும் எந்த ஒன்றின் மதிப்பையும் அதன் சமூக விளைவுகள் மூலமாகத்தான் அளவிடுதல் வேண்டும். மனிதனுடைய ஆளுமை வளர்ச்சியானது சமூக சூழ்நிலையில்தான் வளர்ச்சி பெறும். நிகழ்காலமே கவனத்திற்குரியது. இறந்த காலமும், நிச்சயமில்லாத எதிர்காலமும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை அல்ல. சாதனங்களும், வழிமுறைகளும் தான் முக்கியமே தவிர இறுதி நோக்கங்கள் அல்ல என இக் கோட்பாடு குறிப்பிடுகின்றது.

 உளவியல் கண்ணோட்டத்தில் மதிப்பீடு செய்வோமாயின், 

கல்விக் கருமமானது பிள்ளையை மையமாகக் கொண்டிருத்தல் வேண்டும் என அவர் வலியுறுத்துகின்றார். பிள்ளை, உயிர்ப்பின்றி - தொழிற்படாது செவிமடுப்பவனாக அன்றி - உயிர்ப்புடன் செயற்பாடுகளில் ஈடுபடுபவனாக இருத்தல் வேண்டும் என்பது அவரது கருத்தாகும். உயிர்பற்ற மௌனத்தை விட சப்தத்துடன் கூடிய துலங்கல் உயர்வானது என்பது டூயியின் கருத்தாகும்.

இவ்வாறாக பிள்ளையின் உள்ளார்ந்த தன்மைகளுக்கும் உளவியல் விருத்திக்கும் பொருத்தமானவாறு கல்வியை திட்டமிட வேண்டும். விடயங்களை விளங்கிக் கொள்வதற்கும் கிரகித்துக் கொள்வதற்கும் செயற்படுவதற்கும், கோவைப்படுத்திக் கொள்வதற்குமான அடிப்படைத் திறன்கள் பிள்ளையிடம் காணப்படுகின்றன. எனவே தொழிற்பாடுகளின் மூலமே கல்வியைப் பெற்றுக் கொடுக்க ஆரம்பித்தல் வேண்டும். ஆரம்பக் கல்வியை இயன்ற அளவிற்கு தொழிற்பாடுகள் மூலமும் அனுபவங்கள் மூலமுமே பெற்றுக் கொடுத்தல் அவசியமென்பது அவரது உறுதியான கருத்தாகும். 

அத்தோடு கல்வியானது பிள்ளையின் முதிர்ச்சிக்கும் விருத்திக்கும் ஏற்புடையதாக அமைதல் வேண்டும். விருத்திக்கு ஏற்ப திறன்கள், ஆசைகள், ஆர்வங்கள் வளர்ச்சியடைகின்றன. அவ்வளர்;ச்சிக்கு இயைய கற்றலையும் அனுபவங்களையும் தொழிற்பாடுகளையும் ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும் என ஜோன் டூயி பிரேரிக்கின்றார். 

“உயிர்பற்ற - செயற்படாத பிள்ளை, தனியே கருத்துக்களை கிரகித்துக் கொள்பவனே ஆவான். உயிர்ப்பான செயற்படுகின்ற பிள்ளை கருத்துக்களை தோற்றிவிப்பவனுமாகின்றான்”. எனவே பிள்ளைக்கு கருத்துக்களை அதிகமாக புகட்டல் கூடாது. கருத்துக்துக்கள் வெளிக் கொணரப்படுவதற்கு ஏற்ற சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும்.

திறமையாக கருமமாற்றும் வழியை விளங்கிக் கொள்வதன் மூலமே நுண்ணாய்வுத் திறன் வெளிக் கொணரப்படுகின்றது. இத்திறன்களை வெளிக் கொணர்ந்து கொள்வதற்காக பிள்ளைகளுக்கு செற்படுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அவசியமாகும் எனவும், ஆசிரியர் பிள்ளையின் முதிர்ச்சி நிலையையும் திறன்களையும் உணர்ந்து கொண்டு அந்நிலையை விருத்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை திட்டமிட வேண்டும் எனவும் டூயி குறிப்பிடுகின்றார்.

குழந்தையின் வளர்ச்சி, வயது மற்றும் ஆர்வங்களுக்கு ஏற்ற கல்வி ஏற்பாடு அமைய வேண்டும். தொடக்க நிலையில் வாசித்தல், எழுதுதல், எண் கணக்குகளைச் செய்தல், இயற்கை அறிவு, கைவேலை, சித்திரம் வரைதல் போன்றவற்றை மாணவாகளின் ஆர்வத்திற்கு ஏற்ப அமைக்க வேண்டும். மொழி, உடல்நலம், சமூக அறிவு, அறிவியல், கணிதம், புவியியல் போன்றவை சேர்க்கப்பட வேண்டும். 

பயன்பாட்டு வாதத்தின் அடிப்படையில் கல்வியானது உயிரியல், சமூகவியல் சூழலில் குழந்தையானது தனது தேவைகளை சந்திப்பதற்கு உதவுவதற்காகவே பிள்ளைகளின் நிகழ்காலத் தேவை எதுவோ அதனை கல்வியானது நிறைவேற்ற வேண்டும். இதனை நிறைவேற்றாத கல்வி வீணானதேயாகும். என பயன்பாட்டு வாதம் விளக்குகின்றது. இதனால் இக்கோட்பாடு இன்று முக்கியத்துவம் பெறுகின்றது. அதாவது நவீன சமூகத்திற்கு ஏற்ற அங்கத்தவனாய் பிள்ளையை தயார்படுத்துவதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். இலங்கையினைப் பொறுத்த வரையில் கடந்தகாலங்களில் இத்தகைய பிள்ளைகளை உருவாக்கத் தவறியமைதான் கல்வி மாற்றப்பட வேண்டியதற்கும், பொருத்தமற்ற விளைவுகள் ஏற்படுதலுக்கும் காரணமாயின. கல்வி செய்ய வேண்டியது யாதெனின் குழந்தையை சிறந்த பயன்பாட்டு வாதியாக மாற்றுவதாகும். எவ்வாறெனில் ஒரே நேரத்தில் ஒரே பிரச்சினையை அணுகி புதிய சூழலில், புதிய தொழிநுட்பத்தோடு சந்தர்ப்ப சூழ்நிலைகளின் தேவைக்கேற்ப கூட்டாக அப்பிரச்சினைகளைத் தீர்க்ககூடிய ஆற்றலுள்ளவர்களாக அவர்களை ஆக்குதலாகும். கல்வி உலகில் பயன்பாட்டு வாதிகளின் உண்மையான அனுபவத்திற்கே இடமளிக்கின்றனர்.

சமூகவியல் கண்ணோட்டத்தில் மதிப்பீடு செய்வோமாயின், 

டூயி குறிப்பிடுவதற்கு இயைய, சமூகம் என்பது அனுபவங்களை சேகரிக்கும் ஒரு நிறுவனமாகும். எனவே கல்வி நிறுவனம் ஒன்றும் அக்கருமத் தொடருடன் தொடர்புறுதல் வேண்டும். கல்வியின் போது பிள்ளையின் திறன்கள் அடிப்படையாக அமைய வேண்டியது அவசியமாகும். அத்திறன்களை திருத்தமாக விளங்கிக் கொள்வதும், அத்திறன்களின் மூலம் இயலுமான அளவு திறன்களை சமூகத்திற்கு சமூகத்திற்குப் பெற்றுக் கொடுப்பதும் அவசியமாகும். டூயி குறிப்பிடுவதற்கு ஏற்ப கல்வி என்பது வாழ்க்கைக்காக தயாராவது அல்ல. வாழ்க்கை கருமத் தொடரில் பங்குபற்றுவதே கல்வியாகும். எனவே கல்வியானது சமூகத்திற்கும், இயற்கைக்கும் இடையிலான பரஸ்பர தொடர்பை விருத்தி செய்வதொன்றாகும். 

முழுமையான கல்வி, தொடர்ச்சியான ஒரு கருமத் தொடராகும். பிள்ளை வளரும் வீட்டையும் அவன் கல்வி பெற்ற பின் நுழையும் சமூகத்தையும் இணைக்கும் கருமம் பாடசாலையினால் ஆற்றப்பட வேண்டியதொன்றாகும். பாடசாலையானது, சமூகத்திற்கு இயைபானதாக அமையாது, போலியனாதொரு தன்மையை பெற்றமையே பண்டைய கல்வி முறைமை வெற்;றிகரமானதாக அமையாமைக்கு காரணமாகும் என்பது டூயியின் கருத்தாகும்.

ஒவ்வொரு பாடத்தையும் கற்பிப்பதற்குப் பதிலாக சமூகக் கருமங்களில் ஈடுபடுத்திக் கொள்வதற்கும், கூட்டுத் தொழிற்பாடுகள் மூலம் சமூகம் தொடர்பான அறிவைப் பெற்றுக் கொடுப்பதற்குமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு ஏற்ப பாடவிதானத்தை தயாரிக்கும் போது, பாடசாலைச் சமூகத்திற்கும் சமூக அனுபவங்களுக்கும் பிரதான இடம் வழங்கப்பட வேண்டும். அவரது மாதிரிப் பாடசாலையி;ல் , உணவு சமைத்தல், துணி துவைத்தல் போன்ற பாடங்களை சமர்ப்பித்து, அப்பாடங்களின் மூலம் பரீட்சார்ந்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். வாழ்க்கையில் இருந்தும் சமூகத்தில் இருந்தும் விலகியிருக்கும் பாடசாலையை தொழிற்பாடுகளின் மூலம் வாழ்க்கை, சமூகம் ஆகிவற்றுடன் ஒன்றிணைத்தல் வேண்டும் என்பது டூயியின் கருத்தாகும்.

உணவு, உடை, வாழிடம் என்பன தொடர்பான பாடங்களை பாடசாைலைக் கல்வியுடன் தொடர்புபடுத்தல் வேண்டும். உணவு சமைத்தல், தையல் வேலை, கைப்பணி போன்ற பாடங்களை அவரது பாடவிதானத்தில் உள்ளடக்கியமையின் மூலம் அவர் புதுச் சிந்தனை ஒன்றினையும் புது வழிவகை ஒன்றிணையும் தோற்றுவித்தார். ஆக்க பூர்வமான வெளியீட்டு வழிவகைகளின் மூலம் புதுச் சிந்தனையை தோற்றுவிப்பதற்கும் - சமூகத்துடன் முன்னேறிச் செல்வதற்கும் சமூகத்திற்கு எவற்றையேனும் ஒப்படைப்பதற்குமான திறமையை பாடசாலை கொண்டிருத்தல் வேண்டும். 

மேற்படி பிரேரணைகளுக்கு ஏற்ப, ஆசிரியரின் கருமமும் வேறுபடுகின்றது. பிள்ளையை உணர்ந்து கொண்டு, பிள்ளையின் முதிர்ச்சிக்கு - விருத்திக்கு இயைய, அவனது ஆசைகள், விருப்பக்களுக்கு அமைய, அவனது முழு வளர்ச்சிக்குத் தேவையான அனுபவங்களை கொடுத்தலே ஆசிரியரது கருமமாக இருத்தல் வேண்டும். ஆசிரியர் அறிவை வழங்குபவராக அன்றி அறிவு பிறப்பதற்கு, தோற்றுவிக்கப்படுவதற்கு வழிகாட்டியாகவே அமைதல் வேண்டும் என டூயி எடுத்துக் காட்டுகிறார்.

ஆசிரியர் ஆக்கபூர்வமான சிந்தனைக்கு வழிகாண்பவர் ஆவார். அவர் புது அனுபவங்களை பெற்றுக் கொள்வதற்குத் தேவையான முறைகளை நுண்ணாய்வு செய்பவர் ஆவார். அதற்கேற்ப பிரச்சினை தீர்க்கும் முறையே பொருத்தமான கற்பி;த்தல் முறையாகும். பிற்காலத்தில் செயல்முறையாக விருத்தியடைந்ததும் டூயியின் இக்கருத்துக்களே ஆகும். வெறுமையான இடத்தில் உயிர்பற்றதோர் இடத்தில், பிரச்சினைகள் ஏதும் அற்ற ஓரிடத்தில் கற்பனை ரீதியிலான அறிவைக் கட்டியெழுப்ப முடியாது. எனவே செயற்படுகின்ற, உயிர்ப்பான சுற்றாடல் ஒன்றின் அறிவைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொடுக்க வேண்டும். பிரச்சினை தீர்க்கும் போது தனித்தனியாகவும் கூட்டாகவும் முயற்சிப்பதற்கான வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்தல் வேண்டும். இதற்கேற்ப குழுக் கற்பித்தல் முறைக்கு ஆர்வமூட்டல் வேண்டும். பாடசாலை என்பது சமூகத்தின் பிரதிமையாகையால் கூட்டான முயற்சி, கூட்டுத் தொடர்புகள், பரஸ்பர நல்விளக்கம் என்பன விரிவடையும் வகையிலான அனுபவங்களை பெற்றுக் கொடுத்தல் வேண்டும். 

தற்காலத்தில் தொழிற்கல்வியுடன் இணைந்த வகையில் கல்வியின் புரிதலும் அதிகமாக சமுதாயத்தில் மையம் கொண்டுள்ள நிலையில் அரசாங்கமும் அனுபவம்சார் கல்வி நிலையை ஆரம்பப்பிரிவு தொடக்கம் உயர்தரம் வரை நடைமுறைப்படுத்தும் செயலில் இறங்கியுள்ளது என்று கூறலாம். அனுபவக்கல்வி என்பது ஒரு மாணவனிற்கு புலன்களின் மூலம் உணரப்படும் பிரச்சினைகள், மற்றும் அவதானம், செயற்பாடுகள் என்பவற்றின் தொகுப்பே ஆகும். 

அந்த வகையில் அனுபவமான விடயங்கள் நிலைத்து ஆழமான பதிவுகளையும் பிரச்சினைக்கான சிறந்த தீர்வினையும் உருவாக்கும். இதனால்தான் அனுபவ ரீதியான கல்வியின் முக்கியம் உலக நாடுகளில் உணரப்பட்டுள்ளது. பாடசாலைகளில் ஆய்வுகூடங்கள் அமைத்தல், சுற்றுலா செல்வதற்கான அனுமதி அரசினால் உருவாக்கப்பட்டமைக்கு காரணம் அனுபவம்சார் கல்வியை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கினாலேயே ஆகும். 

அனுபவக்கல்வியின் முக்கியத்துவம் பற்றி ஆரம்பகாலங்களில் உணரப்பட்டுள்ளது என்பதனை பயன்பாட்டுவாதம் ஊடாக அறியக் கூடியதாக உள்ளது. கல்வி அனுபவம் மூலம் கிடைக்கப்பெற வேண்டும். பாடசாலையில் வழங்கும் அறிவும் சமூகத்தில் பெறும் அனுபவமும் ஒத்ததன்மை கொண்டதாக காணப்பட வேண்டும். பாடசாலை கற்றல் அனுபவமானது வாழ்க்கைக்கற்றல் அனுபவங்களோடு தொடர்புபட்டு காணப்பட வேண்டும். வகுப்பறையில் மேசைகளை அகற்றி வேலைக்களங்கள், மணல், செங்கல் கொண்டு வர வேண்டும். பாடசாலையினை விட பாடசாலைக்கு வெளியே கற்றலுக்கான சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். 

மேற்கூறப்பட்ட விடயங்களின் அடிப்படையில் அனுபவ கல்வியின் புரிதல் தத்துவங்களாக வடிவமைக்கப்பட்ட நிலையை எம்மால் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அத்துடன் பயன்பாட்டு வாதத்தில் டூயி ஆராய்தல், பிரச்சினை தீர்த்தல், அவதானிப்பு ஆகிய முறைகளையே கல்வியில் முதன்மைப்படுத்தியுள்ளார். மேலும் அனுபவக் கல்வி முறை இலங்கை பாடசாலைகளில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என பார்த்தால் ஆரம்பப்பிரிவில் புதிதாக முதலாம் தரக் கல்வியை பயில வரும் மாணவர்களுக்கு “பாடசாலை புகுதல் செயற்பாடு” எனும் புதிய விடயம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு தங்கள் வீடுகளின் நினைவை ஏற்படுத்தும் வகையில் அவர்களுடைய விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் போன்றவற்றைக் குறிப்பிட்ட வீடு போன்ற அமைப்புடன் காணப்படும் மாதிரி அமைப்பிற்குள் வைத்து விளையாடுவர். இது மாணவர்களுக்கு தங்கள் வீட்டில்தான் உள்ளோம் என்ற மகிழ்ச்சியான நிலைக்கு இட்டுச் செல்வதுடன் உளநிலையை சீராக பேணுவதற்கான ஒரு உத்தியாகவும் கையாளப்படுகின்றது. அது மாத்திரமின்றி ஆரம்பப்பிரிவு மாணவர்களின் வகுப்பறை அமைப்பில் புத்தக மூலை, சித்திரமூலை, விளையாட்டு மூலை, ஆடல் பாடல் மூலை, சதுரங்க விளையாட்டு மூலை, மணல் மூலை போன்ற அனுபவ ரீதியான தங்களுடைய ஆக்கங்கள், செயற்பாடுகள், மணலில் வீடு கட்டுதல், புத்தகங்களை வாசிப்பதற்கான புத்தகங்கள் அடங்கிய தொகுதி என்பவற்றை உள்ளடக்கிய வகையிலேயே வகுப்பறைகள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் மாணவர்கள் ஒவ்வொரு விடயத்தையும் அனுபவ ரீதியாக கற்றுக் கொள்வதற்கான சூழல் அமைத்துக் கொள்ளப்படுகின்றது.       

16 கருப்பொருள் கொண்டதாக சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் ஆரம்பப்பிரிவில் முக்கியப்படுத்தப்பட்டுள்ளன. அதற்காக வாரத்தில் கிட்டத்தட்ட 6 மணித்தியாலங்கள் ஒதுக்கப்படுகின்றது. புதிய கட்டடங்கள், பூங்காக்கள், சந்தை அமைப்புக்கள், கோவில்கள் போன்றவற்றுக்கு நேரடியாக அழைத்துச் சென்று கற்பிப்பதன் மூலம் சிறந்த கருத்தாழத்துடன் கூடிய கல்வியை வழங்கக் கூடியதாக உள்ளது. மாணவர்களை கடைகளிற்கு அழைத்துச் சென்று எவ்வாறு பொருட்களை பெற்றுக் கொள்வது, விற்பது என்பது தொடர்பான பல அனுபவ கற்றல் வழங்கப்படுகின்றது. இலங்கையைப் பொறுத்தமட்டில் இதனை மையமாகக் கொண்டே சந்தை முறை மாணவர்களால் மேற்கொள்ளப்படுகின்றது. இதன் மூலம் பொருட்களைவ விற்கவும், பெற்றுக்கொள்ளவும் மாணவர்கள் பழகிக்கொள்கின்றனர். 

தற்போது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ள 13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி முறைமை தொழிற்பயிற்சியுடன் கூடிய அனுபவக் கல்வியாக மாணவர்கள் அனைவரும் 13 வருடம் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண தரப்பொதுப் பரீட்சைக்கு தோற்றி சித்தியடையாத மாணவர்களும் சித்தியடைந்த மாணவர்கள் தமது விருப்பத் தெரிவின் அடிப்படையில் இக்கல்வி மூலம் தமது வாழ்க்கையின் தொழிலிற்கான அனுபவ கல்வியினை இரண்டு வருடங்கள் பெற்றுக் கொள்கின்றனர். 

2017 இல் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தில் உணவு பதப்படுத்தும் கல்வி, கலை மற்றும் கைவினை போன்ற 26 தொழிற்கல்வி அனுபவ ரீதியான கற்கைக்கு உட்படுத்தப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட விடயங்களின் படி அனுபவக் கல்வி பற்றிய நடைமுறையும் கலைத்திட்டமும் செயற்பாட்டில் உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் வெற்றி நடைபோடும் அனுபவக் கல்வி தொடர்பான அனுபவம் இலங்கைக்கு முற்றுமுழுதாகக் கிடைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். அந்த வகையில் பல கொள்கைகளும் நடைமுறைசார் விளக்கமும் பல கல்வியியலாளர்களுக்கு காணப்பட்டாலும் வளப்பிரச்சினை அனுபவக்கல்விக்கு தடையாகவே உள்ளது. இவ்வாறான தடைகளையும் சவால்களையும் எதிர்கொண்டு கல்வி வளர்ச்சி அடைந்த நாடுகளை விட இலங்கை கல்வி வளர்ச்சிக்கான பயணத்தில் வெற்றியடைய கல்விமாண்களும் புத்திஜீவிகளும் நடைமுறைசார் சீர்திருத்தங்களை முன்னெடுத்தல் எதிர்காலத்தில் இலங்கைக் கல்வித்தரம் மென்மேலும் உயரும் சாத்தியம் உள்ளது. 

பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக எழுந்து கொண்டிருப்பதால் காலமாற்றத்திற்கு ஏற்ப கலைத்திட்டமானது மாற்றமடைய வேண்டும். நிலையான கலைத்திட்டம் ஆனது பொருத்தமான வெளிப்பாட்டினைக் காட்டாது. பிள்ளைகள் அறிவுக்காக புத்தகங்களை பயன்படுத்தினாலும் அவர்கள் புத்தக பூச்சிகளாவதை பயன்பாட்டுவாதம் விரும்புவதில்லை. இலங்கையின் கலைத்திட்டம் கடந்த காலத்தில் இவ்வாறான புத்தக பூச்சிகளை உருவாக்கியதால் ஏற்பட்டுள்ள விளைவே பெருகி வந்த வேலையில்லாப் பட்டாளம் ஆகும். கற்றலானது வெறுமனே அறிவைப் பெறும் மந்தமான செயற்பாடாகவும், புத்தகத்துக்கோ, பாடத்திற்கோ, ஆசிரியருக்கோ அல்லாமல் குழந்தைக்கே முதலிடம் கொடுக்கும் சுறுசுறுப்பான உயிர்ப்பான செயற்பாடாக இருத்தல் வேண்டும் எனவும், சமுதாய உறுதி, ஒருமைப்பாடு என்பவற்றிற்கு ஏதுவான பாடங்களைக் கொண்டு குழந்தையின் இயற்கை இயல்பு வாழ்க்கைக்குப் பொருந்துவதாக கலைத்திட்டமானது அமைய வேண்டும் எனவும் பயன்பாட்டு வாதம் வலியுறுத்துகின்றது. இக் கருத்துக்களால் பயன்பாட்டு வாதமும் குழந்தைமைய கல்வியையே வலியுறுதிதுகின்றது எனலாம். 

பயன்பாட்டுவாதம் இலங்கை கல்வி முறையில் பயன்பாட்டில் உள்ளது. ஆரம்ப மற்றும் இடைநிலை மாணவர்களின் இணைப் பாடவிதான செயற்பாடுகளை விருத்தி செய்வதற்காக மாணவர் மன்றங்கள் நடாத்தப்படல், உயர்தரத்தில் பல்வேறு வகையான பாடத் தெரிவுகள் காணப்படுதல், மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் மாத்திரமின்றி விளையாட்டுப் போட்டி, இசை, நடனம், சித்திரம், பேச்சு, உலக பாடசாலை செஸ் போட்டிகள் போன்ற பல செயற்ாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகளின் அடிப்படையில் கற்றல் கற்பித்தலானது இடம்பெறுதல், பாடசாலைகளில் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான செய்றிட்டங்கள் தனியாகவும் குழுவாகவும் மேற்கொள்ளப்படல். மேலும் அவர்களுக்குத் தொழிநுட்ப பாடநெறி அறிமுகப்படுத்தப்பட்டு தொழில் உலகிற்கு அவர்களைத் தயார் செய்ய தொழிற்பயிற்சி சான்றிதழ் வழங்குதல், ஐஊவு தனிப்பாடத்துறை, கலைத்துறைக்கென தனிப்பல்கலைக்கழகங்கள் காணப்படுதல் இதன் மூலம் மாணவர்களின் திறன்கள் வெளிக்கொணரப்படுகின்றது.

மேலும் மகிந்தோதய 1000 இரு மொழிப்பாடசாலைகள்,  தரம் 1 – 5 வரையான வகுப்பறைகளில் கணணி மூலை, செயற்பாட்டு மூலை, வாசிப்பு மூலை, உணவு மூலை, கேட்போர் கூடம், தொழிநுட்ப மூலை, அழகியல் மூலை, உள்ளடங்களாக மகிந்தோதய தொழிநுட்ப ஆய்வுகூடம் அமைக்கப்பட்டிருத்தல். E – தக்சலாவ, போன்ற தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டங்கள் காணப்படுதல், ஆசிரியர்களுக்கு ஜப்பன் மற்றும் கொரிய மொழி பயில்வதற்கான புலமைப்பரிசில் வழங்குதல், சீனமொழி கற்பதற்காக தொழிநுட்ப உதவி வழங்குவதற்கு சீனாவின் கென்பியூசியஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்பு, தேசிய கல்வி நிறுவகம், கொரியன் மொழி டிப்ளோமா கற்கை நெறியை கொரியாவின் தேசிய பல்கலைக்கழகத்தின் அறிவுரையின்படி ஆரம்பித்தமை, இரு நகரின் நண்பர்கள் மற்றும் பாடசாலை சினேகம் போன்ற நிகழ்ச்சித் திட்டங்கள் மூலம் மாணவ ஆசிரியர் குழுக்களை ஒன்றிணைத்தல். 

கற்கக் கூடிய மாணவர்களைக் கொண்ட பாடசாலை முறைமையில் ஆய்வு மற்றும் நவீன தொழிநுட்பத்துடன், பொருத்தமான பயிற்றப்பட்ட தேர்ச்சிமிக்க ஆசிரியர்கள் மற்றும் புத்தாக்க கலைத்திட்டத்தினூடாக அதி நவீன கல்வியை இலங்கை பாடசாலை முறைமையிலுள்ள மாணவர்களுக்கு வழங்குல் என்ற தேசிய கல்வி நிறுவகத்தின் பணிக்கூற்றும் பயன்பாட்டு வாதத்தினையே எடுத்துரைக்கின்றது. அறிவதற்காக கற்றல், செயலாற்றுவதற்காக கற்றல், வாழக்கற்றல், இணைந்து வாழக்கற்றல் எனும் UNESCO வின் நான்கு கல்வியின் தூண்களும் பயன்பாட்டு வாதத்தின் செல்வாக்குக்கு உட்பட்டுக் காணப்படுகின்றது. 

சனநாயக சமூகமொன்றில் கருமாற்றும் விதத்தை பாடசாலை, அனுபங்களின் ஊடாக பெற்றுக் கொடுத்தல் மூலம் அந்நிருவாகக் கருமத் தொடரை வெற்றிகரமானதாக ஆக்கிக் கொள்ளலாம். சனநாயகம் என்பது ஒரு வாழ்க்கைக் கோலமாகும். அது சட்ட திட்டங்களை தாண்டிச் செல்கின்ற மிக மேன்மையான ஓர் எண்ணக்கருவாகும். சனநாயகம மூலம் சாதி, குலம், கோத்திரம் போன்ற வேறுபாடுகள் நீக்கப்பட்டு சமூக முன்னேற்றத்திற்காக வழிகோலப்படுகின்றது. அவ்வாறானதோர் உயரிய சமூகத்திற்குள் பழக்கப்படும் வழிவகைகளை பாடசாலை மூலம் பெற்றுக் கொடுப்பது கல்வியின் முக்கியமாதொரு எதிர்பார்ப்பாகும். 

பாடசாலைகளில் கற்பித்தல் முறைகளை மாற்றியமைப்பதற்கும், ஆசிரியரின் மனப்பாங்குகளையும், செயற்பாடுகளையும் வளர்ப்பதற்கும், பாடசாலை பாடவிதானத்தை நவீனமயப்படுத்துவதற்கும் அவரது கருத்துக்கள் உதவின. பிரச்சினை தீர்க்கும் முறை, வாழ்க்கைத்திறன்கள் போன்ற பாடங்கள் பாடவிதானத்தில் சேர்க்கப்பட்டமைக்கான காரணமாக அமைந்தவை டூயியின் பிரேரணைகளாகும். அத்தோடு கூட்டு முயற்சி, குழுமுறை என்பன மூலம் மாணவனை உயிர்ப்பாக பங்குபற்றுபவனாக மாற்றுவதற்கும் வேலை செய்வதன் மூலம், ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்வதற்கும் டூயியின் பிரேரணைகள் பயனாய் அமைந்தன. 

“குறித்த நோக்கங்கள் - குறிக்கோள்கள் இல்லை” என சமர்ப்பித்த கருத்துக்கள், வேறுபட்டுச் செல்லும் அமெரிக்கச் சமூகத்திற்கு இயைபானவையாக அமைந்ததோடு விஞ்ஞானபூர்வ வெற்றியுடன் கூட்டாகச் செல்வதற்கும் அவரது கருத்துக்கள் அமைவானமையினால், முழு உலகு பூராகவும் அக்கருத்துக்கள் மிக விரைவாக பரவின. பிற்காலத்தில் அவரது கருத்துக்கள் பெரிதும் விமர்சிக்கப்பட்ட போதிலும், புதியதொரு சிந்தனையை சமர்ப்பித்து கல்வித் துறையில், பங்களிப்புச் செய்தவரும், இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிக உயர்வானதொரு கல்வித்தத்துவ ஞானியுமாவார் என ஜோன் டூயியை குறிப்பிடலாம்.

 கற்றல் - முறையின் அடிப்படையில் மதிப்பீடு செய்வோமாயின்,

வாழ்க்கையில் தோன்றும் உண்மை நிலைகளை எதிர் நோக்கி இவற்றில் காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணத் தேவைப்படும் அறிவு, செயல்திறன்கள் போன்றவற்றைக் குழந்தை தானே முயன்று அடைய வேண்டும் என்று வலியுறுத்துகிறது. சிந்தனையைக் காட்டிலும் செயலே சிறந்ததாகும் என்று கூறுகிறது. 

‘செய்து கற்றல்’ என்பது இவர்களது கல்வி முறையின் அடிப்படைக் கருத்தாக உள்ளது. பிரச்சனைகளைத் தீர்த்தல், தானே கண்டுபிடித்தல் ஆகியவை வலியுறுத்தப்படுகின்றன. செயல்திட்ட முறையே இக்கொள்கையின் சிறப்பம்சமாகும். செயல் திட்டமுறையில் இடம் பெறும் 5 படிநிலைகளாவன: 

1. பிரச்சினையை உணர்தல் 

2. தேர்ந்தெடுத்த பிரச்சினைக்குரிய தீர்வை அடைந்திடும் வழிமுறைகளை வரிசைப்படுத்தி, செயல் திட்டத்தைத் திட்டமிடுதல் 

3. செயல் திட்டத்தை நடைமுறைப் படுத்துதல். 

4. இறுதியில் விளைந்த பயனையும், செயற்படுத்தும் முறையையும் மதிப்பிடுதல் 

5. செயல் திட்டத்தை மேற்கொள்வதற்கு வழிகாட்டியாக இருந்து தொடர்ந்து பணி செய்ய ஆசிரியர் உறுதுணையாக இருத்தல் 

மாணவர் ஒழுக்கமும், கட்டுப்பாடும் 

அறப்பண்புகள் நிரந்தரமானவை என்ற நிலை மறுக்கப்படுகின்றது. குறிக்கோளுடன் அமைந்து, பள்ளிச் செயல்களை இணைப்பதால் நிகழும் கூட்டுச் செயல்களே, சமுதாய நிலையில் திகழவேண்டிய கட்டுப்பாடுகளுக்கு வகை செய்யும் என்று இக்கொள்கை கருதுகிறது. அதிகாரத்தால் மேல்நிலையிலிருந்து திணிக்கப்படும் கட்டுப்பாடுகள் பயனற்றவை. தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளுதல் என்பதுதான் மாணவர்கள் பெறும் கட்டுப்பாடு ஆகும். மாணவர்களே நியதிகளையும், விதிகளையும் பள்ளியில் உருவாக்கிச் செயற்படுத்துதல் வேண்டும். அவர்களே ஏற்படுத்திக் கொண்ட விதிமுறைகள், அவர்களிடம் அடக்கம், கட்டுப்பாடு போன்ற அறப் பண்புகளை வளர்க்கும். 

ஆசிரியரின் பங்கு  

குழந்தைகளின் நண்பராகவும், வழிகாட்டியாகவும், அறிவுரைப் பகர்பவராகவும், சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்துபவராகவும் இருத்தல் வேண்டும். ‘செயல் திட்டத்தின் நெறியாளர்’ என்ற வகையில் ஆசிரியர் செயல்பட வேண்டும். மாணவர்கள் கூட்டுச் செயலில் திறமையுடன் பங்கு கொள்ளுதலை ஊக்குவிக்க வேண்டும். மாணவர்கள் கலந்து ஆலோசித்தல், செயல்படுதல், திட்டமிடுதல், மதிப்பிடுதல் ஆகியவற்றை அனுபவத்தின் மூலமாகப் பெற அவர் துணைபுரிய வேண்டும். ஆசிரியர் சிறந்த பயிற்சி பெற்றவராகவும், திறன் வாய்ந்தவராகவும், செயல்தன்மை நிரம்பியவராகவும் விளங்க வேண்டும். ஜனநாயகப் பண்பு மிக்கவராக இருத்தல் வேண்டும்.

டூயியின் கல்விக் கருத்துக்கள் காந்தியின் ஆதாரக் கல்வியின் அடிப்படைக் கருத்துக்களை ஒத்திருக்கின்றன என்பது, ஒன்றுடன் ஒன்று ஒப்புநோக்கினால் தெளிவாக நமக்கு விளங்கும். பயன்கொள்வாதம் சில குறைபாடுகளை கொண்டுள்ளதாகவும் அவதானிக்கப்படுகின்றது. இது கல்வியின் இறுதி நோக்கங்களில் கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு காணப்படுகின்றது. இவ்வாதத்தினை முற்போக்கு வாதம் எனவும் அழைக்கின்றனர். முற்போக்கு வாதிகளின் இவ்வாதம் பற்றிய தவறான புரிதல்கள் மற்றும் விளக்கம் காரணமாக கல்வியில் வீழ்ச்சியும் ஏற்படுகின்றது. முற்போக்குக் கல்வி என்பது குழந்தைகளது மனம் போன போக்கில் அவர்களைச் செயல்பட விடுவது முடிவை அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்க நாட்டின் இத்தவறான போக்கின் விளைவாக டூயியின் கல்விக் கருத்துக்கள் அந்நாட்டுக் குழந்தைகளது கல்வியின் தரத்தைக் குறைத்துள்ளன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இன்றைய விஞ்ஞான உலகில் விஞ்ஞான அறிவு நாளுக்கு நாள் குறிப்பிடத்தக்க முறையில் முன்னெறிக் கொண்டிருக்கிறது. டூயியின் முறைகளின் விளைவாக மாணாக்கர் பெறும் பொருளறிவு வெகுவாகக் குறைந்துள்ளது என்றும் இதன் விளைவாக விஞஞானத்துறை, கல்வித்துறை ஆகியவற்றில் பிற நாடுகளைக் காட்டிலும் அமெரிக்கா ஓரளவு பின்தங்கியுள்ளது கூறப்படுவதும் கவனிக்கத்தக்கது.

பயனளவைக் கொள்கையின் முக்கிய குறைபாடு அதன் தத்துவக் கருத்துககள் தத்துவப் பிரச்சினைகள் பலவற்றுக்கு விடையளிக்கப் போதுமானவையாயில்லை என்பதாகும். முக்கியமாக இக்கொள்கை உள்ளத்தின் உண்மைத் தன்மையை புறக்கணித்து விடுகிறது. மனிதனின் உடல் தேவைகளை நிறைவுறச் செய்யும் கருவியாக மட்டும் உள்ளம் அமைவதில்லை மற்றும் உண்மையான கருத்துக்கள் நடைமுறைப் பயனுள்ளவை என்பதனை ஏற்றுக் கொண்டாலும் பயனுள்ளவை யாவும் உண்மை எனப் பொருந்தாது. வாழ்க்கை மதிப்புக்கள், இலக்குகள், குறிக்கோள்கள் போன்றவற்றைப் பற்றிப் பயனளவைக் கொள்கை நமக்கு எவ்விதமான கருத்துக்களையும் தருவதாக இல்லை. மேலும், பயன் என்ற சொல்லுக்கு மகிழ்ச்சி என்றும், அதுவும் தனிபபட்ட ஒருவனுக்கு ஏற்படும் மகிழ்ச்சி என்றும் நாம் பொருள் கொண்டால் சமூக வாழ்க்கை குழப்பம் மிகுந்ததாக காணப்படும்.


முடிவுரை

தத்துவத்தினின்றும் கல்விக் கோட்பாடுகள் எழுகின்றன என்பதைக்காட்டிலும் பயனுள்ள கல்விக் கோட்பாடுகளிலிருந்துதான் தத்துவக் கருத்துகள் வெளிப்படுகின்றன. கல்வியின் இறுதி நோக்கங்களை முன்கூட்டியே நிர்ணயிக்க முடியாது. வாழ்க்கைக்கு உதவும் வகையில் புதிய மதிப்புகளை மாணவன் உருவாக்கிக் கொள்ளுவதே கல்வியின் முக்கிய குறிக்கோளாகும். பயனளவைக் கொள்கையானது செயல், பொறுப்புகள், பங்கேற்பு, நிகழ்நிலைகளைச் சந்தித்தல் ஆகியவற்றைக் கல்விச் செயல்களுக்கு அடிப்படை என்கிறது. ‘கல்வி கல்விக்காகவே’ என்ற கூற்றினை ஏற்காமல் கற்போரின் ஆர்வம், ஆற்றல்கள், துடிப்புகள் ஆகியவற்றை அடைதலை நோக்கி வழிகாட்டுதல்தான் கல்வி என்று இக் கொள்கை நிறுவுகிறது.

செயலாக்கம் நிரம்பிய, உள்ளத்தை வளர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டு, அதனை வளர்க்கவும் முற்படுகின்றது. மனிதனின் தனித்தன்மைக்கு இக்கொள்கை முதுகெலும்பு போன்றது. எந்தப் பொதுவிதியையும், பொதுமைப்படுத்திச் செயல்படுத்த இயலாது. ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை நிரம்பியவன். பயனளவைக் கொள்கையானது, முறையான அமைப்பு மற்றும் அமைப்புச் சாரா சூழல்களில் கல்விச் செயல் நிகழ வலியுறுத்துகின்றது. கல்வியின் நோக்கமாகச் சமூகத்திறன்களை வளர்த்தலையும், அதன்வழிக் கற்போரைச் சமுதாயத்தில் பயனுள்ள குடிமக்களாக ஆக்குதலையும் இக்கொள்கை வலியுறுத்துகின்றது.

மனித வாழ்க்கையின் இறுதிக் குறிக்கோள்கள் எவை என்பதனைத் தெளிவாக இக்கொள்கை குறிப்பிடுவதில்லை எனினும், தத்துவப் பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திக்கவும் அவை பற்றி ஆராயவும் நமக்கு உதவும் ஒரு வழியாகப் பயனளவைக் கொள்கை விளங்குகிறது என்பதனை நாம் மறுக்கவியலாது.



உசாத்துணை நூல்கள்

சரவணகுமார், ஏ. (2019). கல்வி உளவியல், மதுரை: சான்லாக்ஸ் பதிப்பகம்.

மனோகரன், சி. (2018). கல்வித்தத்துவமும் கல்விச்சமூகவியலும், கண்டி: குறிஞ்சி வெளியீடு.

முத்துலிங்கம், ச. (2002). கல்வி உளவியல், கொழும்பு: லங்கா புத்தகசாலை.

ஜெயராசா, சபா. மற்றும் சந்திரசேகரன், சோ. (2008). கற்றல் உளவியல், கொழும்பு: சேமமடு பதிப்பகம்.


0 comments:

Post a Comment